பட்டினிக்கு மனைவியை இழந்தேன்... துப்பாக்கியால் சுடப்பட்டேன்: சூடானில் பிரித்தானியரின் மோசமான நிலை
சூடானில் இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்ட 85 வயது பிரித்தானியர் ஒருவர் தமது பரிதாப நிலையை குடும்பத்தினர் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
எவ்வித உதவியும் செய்யவில்லை
சூடானின் கார்டூம் பகுதி அருகாமையில் 80 வயதான தமது மனைவியுடன் குடியிருந்து வந்த 85 வயது அப்துல்லா ஷோல்காமி தமது பரிதாப நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
Credit: Sholgami Family
சூடானில் இருந்து வெளியேறும் பொருட்டு, பிரித்தானிய அரசாங்கம் தமக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள ஷோல்காமி, மாறாக போர் நடக்கும் பகுதியை கடந்து கார்டூம் பகுதிக்கு வெளியே 25 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு செல்ல அதிகாரிகள் தரப்பு கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
கடும் பட்டினியை எதிர்கொண்ட இந்த தம்பதி, உதவி கேட்டு தமது மனைவியை வெளியே அனுப்பும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, மூன்று முறை சூடான் தரப்பால் துப்பாக்கியால் சுடப்பட்டு, கை, மார்பு மற்றும் புறமுதுகில் காயம்படும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் ஷோல்காமி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் குடும்ப உறுப்பினர் ஒருவரால் காப்பாற்றப்பட்டதால் மட்டுமே தற்போது உயிருடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஷோல்காமியின் மனைவி தங்கியிருக்கும் பகுதிக்கு செல்ல முடியாமல் போனதாகவும், இதனால் ஊனமுற்ற அவர் பட்டினியால் இறக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.
சூடானில் ஷோல்காமி தம்பதி தங்கியிருந்த குடியிருப்புக்கு மிக மிக அருகாமையிலே பிரித்தானிய தூதரகம் செயல்பட்டு வந்துள்ளது எனவும், அவர்களுக்கு ஏற்பட்ட நிலை மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் எனவும் ஷோல்காமியின் பேத்தி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தூதரக அதிகாரிகளால் தடுத்திருக்க முடியும்
இந்த இக்கட்டான சூழல் பிரித்தானிய தூதரக அதிகாரிகளால் ஏற்பட்டது எனவும், சூடான் ராணுவத்தையோ அல்லது துணை ராணுவத்தையோ குற்றப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
@reuters
மேலும், எனது தாத்தா பாட்டிகளுக்கு இப்படியான ஒரு நெருக்கடி ஏற்படாமல் பிரித்தானிய தூதரக அதிகாரிகளால் மட்டுமே தடுத்திருக்க முடியும் என்றார். இதனிடையே, ஷோல்காமி எகிப்துக்கு தப்பி, பாதுகாப்பாக உள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ஷோல்காமி விவகாரம் என்பது மிகவும் வருத்தமான ஒன்று எனவும், நீடித்துவரும் தற்போதைய இராணுவ மோதலால் சூடான் ஆபத்தான பகுதி என்றே கருத வேண்டும்.
மட்டுமின்றி, தூதரக உதவியை வழங்குவதற்கான எங்களின் வாய்ப்பும் மிகவும் குறைவாக உள்ளது மற்றும் சூடானுக்குள் ஒவ்வொருவருக்கும் எங்களால் நேரில் உதவியை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.