வாடிகன் அரண்மனை வளாகத்தில் அசுர வேகத்தில் நுழைந்த கார்: துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர்கள்
வாடிகனின் முகப்பு வாசலை அசுர வேகத்தில் கடந்த கார் ஒன்றை சுவிஸ் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டு நிறுத்தியதுடன், சாரதியையும் கைது செய்துள்ளனர்.
மின்னல் வேகத்தில் நுழைந்த கார்
வாடிகன் அரண்மனை வளாகத்தினுள் முகப்பு வாசலையும் கடந்து கார் ஒன்று மின்னல் வேகத்தில் நுழைந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
@AP
இருப்பினும் அந்த கார் அரண்மனை வளாகத்தினுள் பயணித்ததாகவே தகவல் வெளியாகியுள்ளது. கார் அப்போஸ்தலிக்க அரண்மனையின் சான் டமாசோ முற்றத்தை அடைந்ததும், சாரதி வெளியேறியுள்ளார்.
துரிதமாக செயல்பட்ட பாதுகாவலர்கள் அந்த சாரதியை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அந்த நபருக்கு 40 வயதிருக்கலாம் எனவும், கடுமையான மனக் குழப்பத்தில் அவர் இருந்துள்ளார் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதிக்கு அருகாமையில் போப் பிரான்சிஸ் காணப்பட்டாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. வாடிகன் நகரின் மறுபுறம் சான்றா மார்த்தா ஹொட்டலில் போப் பிரான்சிஸ் வசிக்கிறார்.
@rex
சம்பவம் நடந்த வேளையில், பொதுவாக இரவு உணவு முடித்துக் கொண்டு தமது அறையில் போப் பிரான்சிஸ் ஓய்வெடுக்கும் நேரம் என்றே கூறுகின்றனர். ரோமின் மையத்தில் உள்ள வாடிகன் சிட்டியின் முக்கிய நுழைவாயில்களில் ஒன்றான Santa Anna முகப்பு வாயிலையே அந்த சாரதி மின்னல் வேகத்தில் கடந்துள்ளார்.
சுவிஸ் பாதுகாவலர்களால் கண்காணிப்பு
இச்சம்பவமானது மிக அரிதானதாகவே பார்க்கப்படுகிறது. இரவு வேளைகளில் பொதுவாக சாதாரண மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பகலில் பார்வையாளர்கள் செயின்ட் பீற்றர்ஸ் பசிலிக்கா மற்றும் வாடிகன் அருங்காட்சியகங்களை மட்டுமே அணுக அனுமதிக்கப்படுகின்றனர்.
மருத்துவர்களின் பரிந்துரைகளுடன் மக்கள் வாடிகன் மருந்தகத்திற்குச் செல்லலாம், மற்ற கட்டிடங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி தேவை.
வாடிகன் அரண்மனையை பொறுத்தமட்டில் சுவிஸ் பாதுகாவலர்களால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மட்டுமின்றி, பல்வேறு சோதனைச் சாவடிகளும் அமைத்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.