12 வயது சிறுவர்களால் கொன்று தள்ளப்பட்ட 130 பேர்: வெளியான நடுங்கவைக்கும் தகவல்
இந்த மாத துவக்கத்தில் ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவில் 130 படுகொலைக்கு காரணமானவர்கள் 12-14 வயதுடைய சிறார்கள் என ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை புர்கினா பாசோ அரசாங்கமும் தற்போது உறுதி செய்துள்ளது. ஜூன் 4ம் திகதி துப்பாக்கிதாரிகள் சிலர் Solhan கிராமத்திற்குள் நுழைந்துள்ளனர்.
இரவு நேரத்தில் கிராமத்தில் புகுந்த துப்பாக்கிதாரிகள், பின்னர் பார்வையில் சிக்கிய கிராம மக்கள் அனைவரையும் கொன்று தள்ளியுள்ளனர்.
மட்டுமின்றி கிராமத்திற்கு நெருப்பும் வைத்துள்ளனர். மேலும், முக்கிய சந்தை ஒன்றையும் நெருப்புக்கு இரையாக்கினர். மொத்தம் 130 பேர்களின் சடலங்கள் தெருவெங்கும் இருந்து மீட்கப்பட்டது.
சமீப காலங்களில் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட மிக மோசமான தீவிரவாத தாக்குதல் இதுவென புர்கினா பாசோ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும் இந்த தாக்குதலை முன்னெடுத்த பயங்கரவாத குழு எதுவென இதுவரை புர்கினா பாசோ அரசாங்கத்தால் உறுதி செய்ய முடியவில்லை.
ஆனால் இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், அதிர்ச்சி தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. தாக்குதலை முன்னெடுத்தது 12 முதல் 14 வயதுடைய சிறார்கள் என்பது மட்டுமின்றி, அவர்கள் ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் ஆதரவுடன் தாக்குதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புர்கினா பாசோவில் முன்னெடுக்கப்படும் தொடர் தாக்குதல்களால் இதுவரை 1.14 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அண்டை நாடான மாலியில் இருந்து சுமார் 20,000 அகதிகள் புர்கினா பாசோவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை இதுபோன்ற தாக்குதல்களால் சுமார் 500 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.