இந்த லேப்டாப் தான் வெடிகுண்டு..!நடுவானில் பீதியை கிளப்பிய பயணி: விமானி எடுத்த துரித முடிவு!
அமெரிக்காவில் நடுவானில் விமான பயணி ஒருவர் லேப்டாப்பில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நடுவானில் பீதியை கிளப்பிய விமான பயணி
புளோரிடாவில் இருந்து வர்ஜீனியாவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று, அதில் பயணித்த ஒருவர் தனது லேப்டாப்பில் வெடிகுண்டு இருப்பதாக கூறி பீதியைக் கிளப்பியதால், மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப நேர்ந்தது.
அலெஜியன்ட் ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானத்தில் 177 பயணிகளும், ஆறு விமான ஊழியர்களும் இருந்தனர்.
செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட தாஜ் மாலிக் டெய்லர் (27) என்ற பயணி, விமானம் புறப்பட்டு சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, தனது அருகில் இருந்த பயணியிடம், "என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது," என்று கூறிவிட்டு, தனது லேப்டாப்பை சுட்டிக்காட்டி, "இந்த லேப்டாப் தான் வெடிகுண்டு," என்று தெரிவித்துள்ளார்.
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
உடனடியாக அந்தப் பயணி விமான ஊழியர்களிடம் இந்தத் தகவலை தெரிவிக்க, விமானிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட விமானி, உடனடியாக விமானத்தை மீண்டும் ஃப்ளோரிடா விமான நிலையத்திற்கே திருப்புவதற்கு முடிவெடுத்துள்ளார்.
விமானம் தரையிறங்கியதும், வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும், எஃப்.பி.ஐ அதிகாரிகளும் தயாராகக் காத்திருந்தனர்.
டெய்லர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரது உடைமைகள் மோப்ப நாய்கள் மூலம் தீவிரமாகச் சோதிக்கப்பட்டன. எந்தவிதமான வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
டெய்லர் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, விமானம் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. மேலும் அன்று மாலை ரோனோக் நகரை பத்திரமாக விமானம் சென்றடைந்தது.
மனநலப் பாதிப்பு
விசாரணையின்போது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக டெய்லர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், தான் சமீபத்தில் மனநல மருத்துவமனையிலிருந்து வெளியே வந்ததாகவும், தனது உடல்நிலை மற்றும் மருந்துகளின் காரணமாக "தெளிவில்லாமல்" இருந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மேலும், மருந்துகளை எடுத்துக்கொண்டால் தனக்கு தெளிவு பிறக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் டெய்லருக்கு கடுமையான சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |