புலியிடமிருந்து பெற்ற பிள்ளையை தனியாக போராடி காப்பாற்றிய தாய்! குவியும் பாராட்டு
தனது மகனை வாயில் கடித்து கவ்விக்கொண்டிருந்த புலியை, தாய் வெறும் கைகளால் எதிர்கொண்டு காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தனது 15 மாத மகனைக் காப்பாற்றுவதற்காக வெறும் கைகளால் புலியை எதிர்த்துப் போராடிய பெண் ஒருவர் தனது அசாத்தியமான துணிச்சலுக்காக பாராட்டுக்களை பெற்றுவருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு, 25 வயதான அர்ச்சனா சௌத்ரி, தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அருகிலுள்ள, பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் இருந்து வழி தவறி வந்ததாகக் கருதப்படும் ஒரு புலி, வயல்களில் மறைந்திருந்து அவர்களைத் தாக்கியது.
புலி தனது தாடையில் குழந்தையைப் பிடித்தது, ஆனால் தாய் அந்த புலியுடன் சண்டையிட்டு கத்தி, கிராம மக்களுக்கு எச்சரிக்கை செய்ய முயன்றுள்ளார். புலி குழந்தையை அவரிடமிருந்து பறிக்க முயன்றது ஆனால் அர்ச்சனா விடவில்லை.
பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் விரைந்து வந்தனர். அப்போது புலி காட்டுக்குள் ஓடியது.
அர்ச்சனாவின் வீடு புலிகள் காப்பகம் மற்றும் தேசிய பூங்காவின் இடையில் உள்ள பகுதியில் அமைந்துள்ளது.
குழந்தை மற்றும் தயா இருவரையும் புலி பயங்கரமாக தாக்கியுள்ளது. அப்பெண்ணுக்கு நுரையீரலில் துளையிட்டு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. குழந்தையின் தலை மற்றும் முதுகில் ஆழமான காயங்கள் இருந்தன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் புலியை தீவிர தேடுதலுக்கு வழிவகுத்தது; கிராம மக்கள் இரவில் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
யானைகள் மீது வனக் காவலர்கள் மற்றும் பாந்தவ்கர் புலிகள் காப்பக ஊழியர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டதால், மூன்று நாட்களுக்குப் பிறகு புலி கிராமத்தை விட்டு வெளியேறியது.
பயிற்சி பெற்ற மூன்று யானைகள் மற்றும் பாகன்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இறுதியாக புலியை கிராமத்திற்கு வெளியே விரட்ட ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆனது.
உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது.
இந்தியாவில் 2014 மற்றும் 2019-க்கு இடையில் புலிகளின் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2012 மற்றும் 2018-க்கு இடையில் 200 க்கும் மேற்பட்ட புலிகள், வேட்டையாடுபவர்கள் அல்லது மின்சாரம் தாக்கி கொல்லப்பட்டதாக தரவு காட்டுகிறது.