19 சிறார்களை பலி வாங்கிய கோர சம்பவம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர்
தென் அமெரிக்க நாடான கயானாவில் பாடசாலை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 சிறார்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பலர் படுகாயங்களுடன்
குறித்த விபத்தில் சிக்கிய இரு மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், பலர் படுகாயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@AP
ஞாயிறன்று இரவு சுமார் 11.15 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கயானா நாட்டின் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த நிலையில், கட்டிடம் ஏற்கனவே முழுவதுமாக தீப்பிழம்புகளால் எரிந்து கிடப்பதைக் கண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் துரித நடவடிக்கையில் களமிறங்கிய தீயணைப்பு சேவை வீரர்கள், சுமார் 20 மாணவர்களை உயிரை பணயம் வைத்து மீட்டுள்ளனர். இருப்பினும், 14 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர், ஐந்து பேர் மஹ்தியா மாவட்ட மருத்துவமனையில் இறந்துள்ளனர்.
Pic: Facebook
மேலும், இரு சிறார்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் 4 சிறார்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 பேர் கண்காணிப்பில்
மேலும், தீ விபத்து தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கும் வகையில் தேசிய தீயணைப்பு சேவை அதிகாரிகள் சம்பவயிடத்தில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஐந்து குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் 10 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், அப்பகுதியை முழுமையாக ஆராய்ந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் முயற்சி தடைபட்டுள்ளது என கூறப்படுகிறது.
@getty
இந்த நிலையில், பிரதமர் மார்க் பிலிப்ஸ், நாட்டின் கல்வி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சருடன், மருத்துவமனையில் உள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிலரை சந்தித்துள்ளனர்.