ட்ரம்பை அடுத்து கனடாவுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் சீனா... 100 சதவிகித வரி விதிப்பு
கனடாவின் வேளாண் மற்றும் குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கு சீனா சனிக்கிழமை வரிகளை அறிவித்துள்ளது.
மார்ச் 20 முதல் அமுலுக்கு வரும்
சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள், எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது கடந்த அக்டோபர் மாதம் கனடாவால் அறிமுகப்படுத்தப்பட்ட வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வர்த்தக அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இந்த வரிகள் மார்ச் 20 முதல் அமுலுக்கு வரும். கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா மீதான வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததன் அடிப்படையில் இது ஒரு புதிய வர்த்தகப் போராக தற்போது உருவாகியுள்ளது என்றே நிபுணர்கள் தரப்பின் கருத்தாக உள்ளது.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ராப்சீட் எண்ணெய், எண்ணெய் பிண்ணாக்கு மற்றும் பட்டாணி ஆகியவற்றிற்கு சீனா 100 சதவிகித வரி விதிக்கும். கனேடிய நீர்வாழ் பொருட்கள் மற்றும் பன்றி இறைச்சிக்கு 25 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், சீன மின்சார வாகனங்களுக்கு கனடா 100 சதவிகித வரியும், அதன் அலுமினியம் மற்றும் எஃகு பொருட்களுக்கு 25 சதவிகித வரியும் விதிப்பது உலக வர்த்தக அமைப்பின் விதிகளை கடுமையாக மீறும் செயல் என குறிப்பிட்டுள்ள சீனாவின் வர்த்தக அமைச்சகம்,
சேதப்படுத்தும் கொள்கை
சீனாவின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களுக்கு கடுமையாக தீங்கு விளைவிக்கும் பாரபட்சமான நடவடிக்கை இதுவென்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், சீன அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை சேதப்படுத்தும் கொள்கையை எதிர்க்கவே தமது அரசாங்கம் வரிகளை விதித்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகஸ்ட் மாதம் குறிப்பிட்டிருந்தார்.
மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மாதிரியைப் பின்பற்றியே இந்த நடவடிக்கை என்றும் ட்ரூடோ தெரிவித்திருந்தார். ஐரோப்பாவும் அமெரிக்காவும் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கு இறக்குமதி வரிகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |