சிறப்பு மிக்க அந்த விழாவில் அமெரிக்காவையும் குறிப்பிட்டிருக்கலாம்: சீனா குறித்து ட்ரம்ப் ஏமாற்றம்
ஜப்பானின் தோல்வியில் அமெரிக்காவின் பங்கு குறித்தும் சீனா குறிப்பிட்டிருக்கலாம் என டொனால்ட் ட்ரம்ப் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரமிக்க வைத்தது
இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறிக்கும் வகையில் சீனா முன்னெடுத்த விழாவானது சிறப்பானது என்றும், மிக மிக பிரமிக்க வைத்தது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஒன்று திரண்டிருக்கும் தலைவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக சதி திட்டம் தீட்டுவதாக குற்றஞ்சாட்டிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அங்கு நடந்த விழாவினை ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஜின்பிங் அளித்த உரையை தாம் கவனித்ததாகவும், ஆனால் அந்த உரையில் அமெரிக்காவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்றும், ஏனென்றால் அமெரிக்கா இந்த விவகாரத்தில் சீனாவிற்கு மிகவும் உதவி செய்திருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் விளாடிமிர் புடின், வடகொரியாவின் கிம் ஜோங் உன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள தியனன்மென் சதுக்கத்தில் திரண்டிருந்த 50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஜி உரையாற்றினார்.
ஜனாதிபதி ஜி நன்றி
1937 ஆம் ஆண்டு ஜப்பானின் சீனா மீதான படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் ஒரு காரணியாக இருந்தது, மேலும் 1945 இல் ஜப்பானின் சரணடைதல் போரின் முடிவுக்கும் வழிவகுத்தது.
1941 ஆம் ஆண்டு அமெரிக்கா போரில் இணைந்தது, ஜப்பானிய இராணுவத்தை எதிர்த்துப் போராடும் சீனப் படைகளுக்கு உதவியது மற்றும் ஜப்பானின் தோல்வியில் ஒரு முதன்மையான பங்கைக் கொண்டிருந்தது.
சீன மக்களுக்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்த வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச நண்பர்கள் என அனைவருக்கும் ஜனாதிபதி ஜி நன்றி தெரிவித்திருந்தார்.
ஆனால் போரில் அமெரிக்காவின் பங்கு குறித்து அவர் எங்கேயும் குறிப்பிட்டுப் பேசவில்லை. உக்ரைன் முதல் தென் சீனக் கடல் வரை பல்வேறு பாதுகாப்பு விடயங்களில் சீனாவும் அமெரிக்காவும் முரண்படுகின்றனர், மேலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர வரி தொடர்பில் வர்த்தக ஒப்பந்தத்தில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |