சாலையில் தனியாக சிக்கிய உக்ரேனிய குடும்பம்: ரஷ்ய இராணுவத்தினர் செய்த கொடூரம்
உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வெளியே, தனியாக சிக்கிய பொதுமக்களில் ஒருவரை ரஷ்ய வீரர்கள் படுகொலை செய்துள்ள சம்பவம் ஜேர்மன் ஊடகவியலாளர் ஒருவரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த அதிர்ச்சி சம்பவமானது இர்பின் நகருக்கும் 10 மைல்கள் தொலைவில் ஒரு கிராமத்தில் நடந்துள்ளது. கீவ் நகரம் நோக்கி கார் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால் சாலையின் ஒரு பக்கத்தில் ரஷ்ய இராணுவ டாங்கி மற்றும் சில வீரர்களை காண நேர்ந்த அந்த சாரதி தமது வாகனத்தை உடனடியாக நிறுத்தி விட்டு, வாகனத்தில் இருந்து கைகளை மேலே தூக்கியபடி இறங்கியுள்ளார்.
ஆயுததாரி அல்ல என்பதை உணர்த்தும்வகையில் தலைக்கு மேலே கைகளை தூக்கியபடி அவர் நடந்து வந்ததை கவனித்தும், ரஷ்ய ராணுவத்தினர் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். பின்னர் அவரது சடல்லத்தை இழுத்துச் சென்று மரங்கள் அடர்ந்த பகுதியில் மறைவு செய்துள்ளனர்.
அத்துடன், அந்த வாகனத்தில் பயணம் செய்த பெண் மற்றும் குழந்தையை ரஷ்ய இராணுவத்தினர் சிறைபிடித்ததாகவும் கூறப்படுகிறது. குறித்த சம்பவமானது ஜேர்மன் ஊடகவியலாளர் ஒருவரால் ட்ரோன் விமானம் மூலம் படமாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பொதுமக்களை குறிப்பாக அச்சுறுத்தல் இல்லாதவர்களை படுகொலை செய்வது போர்க்குற்றமாக கருதப்படுகிறது.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், பொதுமக்களை துன்புறுத்துவதில்லை என்றே அந்நாட்டு இராணுவம் குறிப்பிட்டு வருகிறது. தங்கள் இலக்கு பொதுமக்கள் அல்ல எனவும், இராணுவம் வகுத்துள்ள திட்டத்தின்படியே செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இருப்பினும், பொதுமக்களை படுகொலை செய்து, உக்ரைன் மக்களின் மன உறுதியை குலைக்க ரஷ்யா தீவிரமான முயன்று வருகிறது.
இதனிடையே, உக்ரேனிய தலைநகர் கீவ் உக்ரைனின் இராணுவம் மற்றும் பிராந்திய பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உறுதியாக உள்ளது எனவும், நகர மையத்தை கைப்பற்றுவதற்கான ரஷ்ய துருப்புகளின் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.