காசாவிலிருந்து வெளிநாட்டவர்கள் வெளியேறும் பகுதி மூடல்: அமெரிக்கா விளக்கம்
அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையில் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காசாவிலிருக்கும் வெளிநாட்டவர்களும், படுகாயமடைந்த பாலஸ்தீனர்களும் காசா, எகிப்து எல்லையிலிருக்கும் ரஃபா என்னும் பகுதி வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள்.
காசாவிலிருப்பவர்கள் எகிப்துக்குள் நுழையவும், காசாவுக்கு உதவிகள் செல்லவும் ரஃபா மட்டுமே ஒரே வழியாகும்.
காசாவிலிருந்து வெளிநாட்டவர்கள் வெளியேறும் பகுதி மூடல்
ஆனால், நேற்று, ரஃபா பகுதி மூடப்பட்டது. அதனால், காசாவுக்குள் உதவிகள் செல்வதும், காசாவிலிருந்து வெளிநாட்டவர்கள் வெளியேறுவதும் தடைபட்டுள்ளது.
அது குறித்து விளக்கமளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த பட்டேல் என்பவர், இன்னதென்று குறிப்பாக விளக்கப்படாத ஒரு பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக காஸாவுக்குள் நுழையும் ரஃபா எல்லை புதன்கிழமை மூடப்பட்டது என்றும், ஆனால் அதை மீண்டும் திறக்க அமெரிக்க அதிகாரிகள் எகிப்து மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஃபாவுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிநாட்டவர்கள் காசாவிலிருந்து வெளியேறுவது நிறுத்தப்பட்டிருந்தது, ஆனால் திங்கள் மற்றும் செவ்வாய் அன்று மீண்டும் அந்த பாதை திறக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மீண்டும் ரஃபா எல்லை மூடப்பட்டது. எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த பாதை மீண்டும் குறிப்பிட்ட இடைவெளிகளில் திறக்கப்படும் என்றும், அதனால் காசா பகுதிக்குள் உதவி வழங்கும் வாகனங்கள் நுழையவும் வெளிநாட்டினர் தொடர்ந்து வெளியேறவும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமெரிக்கா நம்புவதாக பட்டேல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |