பிரியாணியால் சிக்கிய பிரேமலதா விஜயகாந்த்! தேர்தல் நேரத்தில் இப்படியொரு நெருக்கடியா?
தேர்தல் நேரத்தில் பிரியாணியால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புது வித பிரச்சினையில் சிக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 -ம் திகதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடுகள் குறித்து மும்முரமாக பணிகளை செய்து வருகிறது.
அந்தவகையில், தேமுதிக கட்சி அதிமுகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதேநேரம், தமிழகத்தில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.
புது சிக்கல்
நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் மறைந்த பிறகு தேமுதிக அலுவலகத்திலேயே அவரை அடக்கம் செய்து நினைவிடமும் அமைக்கப்பட்டது. மேலும், அங்கு வரும் மக்களுக்கு தினசரி இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி கொடுக்கப்பட்டது.
மேலும், கட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. ஆனால், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்ததால் பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு அரசியல் கட்சிகள் அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.
ஆனால், தேமுதிக எந்தவொரு அனுமதியையும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விருகம்பாக்கம் தேர்தல் பொறுப்பு அதிகாரி ஒருவர் பிரேமலதா விஜயகாந்த் மீது பொலிசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, கோயம்பேடு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.