கனடா இந்தியா அரசுகளுக்கிடையிலான மோதல்: கவலை தெரிவித்துள்ள உலக நாடுகள்
கனடா இந்தியா அரசுகளுக்கிடையிலான மோதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இந்த விவகாரம் குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
கனடாவின் குற்றச்சாட்டு
G 20 உச்சி மாநாட்டுக்காக இந்தியா சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடாவில் காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துதல், தூதரக அதிகாரிகளுக்கெதிரான வன்முறை முதலான விடயங்கள் குறித்துப் பேச, கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நாடு திரும்பிய ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
அதைத்தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, நாட்டை விட்டு வெளியேறும்படி கனடா உத்தரவிட்டது.
இந்தியா பதிலடி
இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது இந்தியா.
குற்றச்சாட்டுக்கு மறுப்பு
கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை சார்பில் ட்விட்டர் அல்லது எக்ஸில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், கனடா பிரதமரும், கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சரும் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இந்தியா நிராகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
India rejects allegations by Canada:https://t.co/KDzCczWNN2 pic.twitter.com/VSDxbefWLw
— Arindam Bagchi (@MEAIndia) September 19, 2023
உலக நாடுகள் கவலை
கனடா, இந்தியாவுக்கிடையிலான மோதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவும், அமெரிக்காவும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதுடன், சம்பவம் குறித்து நடைபெற்றுவரும் விசாரணைகளை கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளன.
பிரித்தானிய தரப்பில், தாங்கள் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கனடாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய அதிகாரிகள் அந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த விடயம் குறித்து இதற்கு மேல் பேசுவது சரியாக இருக்காது என பிரித்தானிய அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |