மண்ணில் புதைந்துள்ளவர்களை கண்டறியும் கருவியுடன்.. வயநாடு விரைந்த கோவை டெல்டா ஸ்குவாட்
வயநாடு நிலச்சரிவில் மண்ணில் புதைந்துள்ளவர்களை எளிதில் கண்டறியும் கருவியுடன் கோவை டெல்டா ஸ்குவாட் அங்கு சென்றுள்ளனர்.
பயங்கர நிலச்சரிவு
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
4 குழுக்களாக 150 மீட்புப்படையினர் மீட்புப்பணியை செய்து வருகின்றனர். அதோடு, தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தன்னார்வலர்கள், ஆம்புலஸ் ஓட்டுநர்கள், ராணுவ மருத்துவ வாகனம் என மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அங்கு சென்றுள்ளனர்.
கோவை டெல்டா ஸ்குவாட்
மேலும், வயநாடு நிலச்சரிவில் மண்ணில் புதைந்துள்ளவர்களை எளிதில் கண்டறியும் கருவியுடன், முப்படைகளின் வீரர்கள் அடங்கிய கோவை டெல்டா ஸ்குவாட் (delta squad) அங்கு புறப்பட்டனர்.
தமிழக மாவட்டமான கோவை, சூலூரில் அமைந்துள்ள விமானப்படை தளத்தில் டெல்டா குவாட் செயல்பட்டு வருகிறது. இது, விமானப்படை, கப்பல் படை, தரைப்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் அடங்கியது குழுவாகும்.
பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் திறம்பட செயல்பட பயிற்சி பெற்றவர்கள். கமாண்டர் ஈசன் தலைமையில் 25 பேர் கொண்ட டெல்டா குழுவினர் வயநாடு புறப்பட்டுள்ளனர்.
அங்குள்ள நிலச்சரிவில் மண்ணில் புதைந்துள்ளவர்களை எளிதில் கண்டறியும் சிந்தடிக் அப்ரைஸர் ரேடார் என்ற கருவியை கொண்டு செல்கின்றனர்.
சேட்டிலைட் சிக்னல் மூலம் இயங்கும் இந்த கருவியை பயன்படுத்தி மண்ணில் புதைந்துள்ளவர்களை எளிதில் கண்டறிய முடியும்.
மேலும், ரப்பர் படகுகள், ரப்பர் ட்யூபுகள், உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள், டார்ச் லைட் ஆகியவற்றையும் கொண்டு செல்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |