இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்.., உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இருந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
உயிர் தப்பினார்
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இருந்து நேற்று (டிசம்பர் 26) உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நூலிழையில் உயிர் தப்பினார்.
யேமன் தலைநகரில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தில் வான்வழி குண்டுவெடிப்பில் இருந்து அவர் தப்பினார். இந்த தாக்குதலில் இருவர் இறந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக டெட்ரோஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஐ.நா. ஊழியர்களை விடுவிப்பது மற்றும் சுகாதாரம் மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த யேமனுக்கு சென்றிருந்தோம்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு நாங்கள் சனாவில் உள்ள விமான நிலையத்தில் விமானம் ஏற காத்திருந்தோம். அப்போது எங்களது விமான நிலையம் வான்வழி தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது எங்கள் விமானத்தின் பணியாளர் ஒருவர் காயமடைந்தார்.
விமான நிலையத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. விமான ஓடுபாதை சேதமடைந்ததுள்ளது.
விமான நிலையத்தின் சேதம் சரிசெய்யப்படும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்கள்" என்று கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “விமான நிலையம் தாக்கப்பட்டதில் ஐநா மனிதாபிமான விமான சேவை குழு உறுப்பினர் ஒருவரும் காயமடைந்தார்.
சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்களை ஒருபோதும் குறிவைக்கக்கூடாது.
இந்த வான்வழித் தாக்குதல்கள் மிகவும் ஆபத்தானது. அனைத்து தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, மிகுந்த நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்றார்.
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய உள்கட்டமைப்பு, மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை குறிவைத்ததாகவும், அதில் சனா சர்வதேச விமான நிலையமும் ஒன்று என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |