ஐரோப்பா தன்னை ஒரு போர்க் கட்சியாக மாற்றியுள்ளது: புடினின் செய்தித்தொடர்பாளர் அதிரடி குற்றச்சாட்டு
ஐரோப்பா இராணுவமயமாக்கல் பாதையில் இறங்கியுள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செலவினங்கள்
ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, வாஷிங்டன் ஐரோப்பிய பாதுகாப்பிற்கான அதன் உறுதிப்பாட்டைக் குறைக்கக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய சக்திகள் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க முயன்றுள்ளன.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியமும், பிரித்தானியாவும் அமைதியைத் தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
இராணுவமயமாக்கும் திட்டங்கள்
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், "பெரும்பாலும், பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களிலிருந்து வரும் சமிக்ஞைகள் ஐரோப்பாவை இராணுவமயமாக்கும் திட்டங்களைப் பற்றி கவலை கொண்டுள்ளன. ஐரோப்பா இராணுவமயமாக்கல் பாதையில் இறங்கியுள்ளது. மேலும் தன்னை ஒரு போர்க் கட்சியாக மாற்றியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவளிப்பது குறித்து விவாதிக்க உயர் மேற்கத்திய இராணுவ அதிகாரிகள் கூடியிருந்ததை, ஐரோப்பிய நாடுகள் அமைதி முயற்சிகளை விட இராணுவக் கட்டமைப்பை முன்னுரிமைப்படுத்துவதாகக் குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார்.
இதற்கிடையில் ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து உக்ரைனில் அமைதி காக்கும் படையினரை அனுப்புவதற்குத் தயாராக இருப்பதாக ஸ்டார்மரும், மேக்ரோனும் கூறியுள்ளனர். இந்த யோசனையையும் ரஷ்யா எதிர்க்கிறது என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |