''இன்பநிதி பாசறை'' அமைத்து போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரனும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி பெயரில் பாசறை அமைத்த புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் இருவரை கட்சியை விட்டு வெளியேற்றி உள்ளது திமுக.
இன்பநிதி பாசறை
நேரடி அரசியலில் ஈடுபடாதவரும், கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாதவருமான அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதியை அரசியலுக்குள் இழுத்து வர திமுகவினர் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்பநிதி பெயரால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திமுகவினர் சிலர் இன்பநிதி பாசறை அமைத்து பரபரப்பு ஏற்படுத்தினர்.
புதுக்கோட்டையில் "இன்பநிதி பாசறை"யின் சார்பில் செப்டம்பர் 24-ந் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையானது.
திமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம்
இந்நிலையில் "இன்பநிதி பாசறை" அமைத்த திமுக நிர்வாகிகளான புதுக்கோட்டை மணிமாறன், திருமுருகன் ஆகியோர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க. செ.மணிமாறன் மற்றும் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க. திருமுருகன் ஆகிய இருவரையும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |