மருத்துவரை மோசமாக நடத்திய சிறுவர்கள்: நாடொன்றில் அதிகரித்துவரும் இனவெறுப்பு
அயர்லாந்தில் சமீப காலமாக ஆசிய நாட்டவர்கள் அல்லது நிறம் சார்ந்தவர்கள் மீதான இனவெறுப்பு அதிகரித்துவருவதுபோல் தெரிகிறது.
அதுவும், பதின்மவயதினர் மற்றும் இளைஞர்களுடைய மன நிலையில் மோசமான மாற்றம் ஏற்பட்டுவருகிறது. சமீபத்தில் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில், அயர்லாந்து நாட்டவரான பெண்மணி ஒருவரே பிள்ளைகள் மோசமாக மாறிவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவரை மோசமாக நடத்திய சிறுவர்கள்
Dr தைமூர் சல்மான் அயர்லாந்தில் பிறந்த பாகிஸ்தான் வம்சாவளியினர் ஆவார்.
அயர்லாந்தில் தன் வாழ்வைத் துவங்கி, பின் பிரித்தானியா மற்றும் சவுதி அரேபியாவுக்குச் சென்று மீண்டும் 2017ஆம் ஆண்டு, தன் மனைவி மகளுடன் அயர்லாந்தில் குடியமர்ந்தார் அவர்.
Drogheda என்னுமிடத்தில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவரும் தைமூர், சமீபத்தில் மளிகைக் கடை ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
அப்போது 10 வயதேயுடைய அயர்லாந்துச் சிறுவன் ஒருவன் அவரை நோக்கி மோசமான வார்த்தை ஒன்றைக் கூறியுள்ளான்.
அது தவறு என்று அவர் அந்தச் சிறுவனிடம் கூற, அவருக்குப் பின்னால் நின்ற ஒரு பதின்மவயது பையன், என் நண்பனிடம் நீ ஏதோ சொன்னாயாமே என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறான்.
தைமூர் நடந்ததைச் சொல்ல, வாயை மூடு என்று கத்திய அந்தப் பையன் அவரை இனரீதியாக கேலி செய்யத் துவங்கியுள்ளான்.
அதைக் கேட்டு ஒன்றும் பதில் பேசமுடியாமல் அமைதியாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாராம் தைமூர்.
நான் அயர்லாந்தில்தான் பிறந்தேன், இங்குதான் ஆரம்பக் கல்வி கற்றேன். அப்போதெல்லாம் நான் இனவெறுப்பைச் சந்தித்ததில்லை.
அதனால்தான் நான் மீண்டும் எனது மனைவி மகளுடன் இங்கு வந்து குடியமர்ந்தேன். ஆனால், இப்போது அயர்லாந்து பயங்கர ஆபத்தான நாடாக மாறிவிட்டது.
இப்படி நிறம் சார்ந்தவர்கள் இனரீதியாக வெளிப்படையாக தாகுதலுக்குள்ளாவது அதிகரித்துவருகிறது என்கிறார் தைமூர்.
2017இல் அயர்லாந்து அமைதியான பாதுகாப்பான நாடாக இருந்தது. ஆனால், இப்போது இங்கு நடமாடுவதே மிகவும் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டதால் தனிமையாக நான் எங்கும் செல்வதில்லை. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு மட்டுமே செல்கிறேன் என்கிறார் அவர்.
சமீபத்தில், மூன்று இந்திய வம்சாவளியினர், அயர்லாந்து நாட்டு இளைஞர்கள் மற்றும் பதின்மவயதினரால் இனவெறித் தாக்குதலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |