ட்ரம்பின் மிரட்டல்... துபாய், தோஹா மீது மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய ஈரான்
ஈரான் மீது மிக மோசமான தாக்குதலை எதிர்பார்க்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது ஈரான் அண்டை நாடுகள் மீது தாக்கத் தொடங்கியுள்ளது.
ஈரான் சரணடையாது
ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில், இன்று ஈரான் கடுமையாக பாதிக்கப்படும் என பதிவிட்டிருந்தார். மட்டுமின்றி, ஈரானின் மோசமான நடத்தையால் முழுமையான அழிவு உறுதி என்றும், மரணம் நிச்சயம் ஏற்படும் என்றும் அச்சுறுத்தியிருந்தார்.

இதனிடையே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் சனிக்கிழமை கூறியதைத் தொடர்ந்து ட்ரம்பின் மிரட்டலும் அச்சுறுத்தலும் வெளியானது.
மேலும், நிபந்தனையற்ற சரணடைதலுக்கான ட்ரம்பின் கோரிக்கையை அது அவர்களின் கனவு என்றும் ஈரான் நிராகரித்தது. ஈரானிய மக்களின் சரணடைதல் என்பது கல்லறையில் மட்டுமே என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட அவர், தாக்குதல்கள் அவர்களிடமிருந்து தொடங்கப்படாவிட்டால் ஈரான் இனி அண்டை நாடுகளை குறிவைக்காது என்றும் உறுதி அளித்தார்.
ஆனால், ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் குறிப்பிட்டிருந்ததை, வளைகுடா நாடுகளிடம் ஈரான் மன்னிப்புக் கேட்டுவிட்டது எனவும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் உக்கிரமான தாக்குதல்களே இதற்கு காரணம் என்றும் ட்ரம்ப் பதிலளித்தார்.
இந்த நிலையில், அமெரிக்கப் படைகளை வைத்திருக்கும் அதன் வளைகுடா அண்டை நாடுகள் மீது சனிக்கிழமையன்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது.
மட்டுமின்றி இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் சரணடையப் போவதில்லை என்றும் சபதம் செய்தது. இஸ்ரேலின் ஜெருசலேம் மற்றும் கத்தாரின் தோஹாவில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் மற்றும் குண்டுவெடிப்புகள் நடந்தன, மேலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் மீது அதிகாலையிலும் பிற்பகலிலும் இரண்டு முறைத் தாக்குதல்கள் நடந்தன.

உக்கிரமான தாக்குதல்
அணுசக்தி பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்த நிலையில், ஈரான் தனது அணுசக்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியதாகக் கூறியதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் முழுவதும் ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டன.
தலைநகர் தெஹ்ரான் உட்பட பல ஈரானிய நகரங்களை குறிவைத்து உக்கிரமான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டது. இதில் உயர் தலைவர் அலி காமெனி, அவரது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் பலியாகினர்.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட ஈரான், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தளங்கள், இராணுவ முகாம்கள், பாதுகாப்பு அமைப்புகள் என அனைத்தின் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன்களால் பதிலடி கொடுத்தது.
முதல் மூன்று நாட்களில் மட்டும் அமெரிக்காவிற்கு பல பில்லியன் டொலர் இழப்புகள் ஏற்பட்டது. பாதுகாப்பு தொடர்பில் வளைகுடா நாடுகள் அமெரிக்கா மீது நம்பிக்கை இழக்கும் வகையில் ஈரானின் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |