தோல்வியில் முடிந்த இஸ்ரேலுக்கு எதிரான விவாதம்... பதவி துறந்த ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர்
இஸ்ரேல் மீது பொருளாதரத் தடை விதிக்கும் அமைச்சரவைக் கூட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் பதவி துறந்துள்ளார்.
கடுமையான நடவடிக்கை
ஏற்கனவே சிக்கலில் இருக்கும் நெதர்லாந்தின் அரசாங்கம், வெளிவிவகார அமைச்சர் Caspar Veldkamp விலகியதை அடுத்து மீண்டும் வலுவிழந்துள்ளது.
Veldkamp-ன் NSC கட்சியினரும் அமைச்சரவை கூட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறியுள்ளனர். வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவை விவாதம் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து எந்த முடிவையும் எட்டவில்லை.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சட்டவிரோத குடியேற்றத்தை முன்னெடுக்கும் இஸ்ரேலின் திட்டங்களைக் கண்டித்து வியாழக்கிழமை நெதர்லாந்து 20 நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து,
இஸ்ரேலுக்கு எதிராக மேலும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்த விவாதங்கள் நெதர்லாந்து அமைச்சரவையில் முன்னெடுக்கப்பட்டது. மேற்குக் கரையில் 3,400 குடியிருப்புகள் அமைவது என்பது அப்பிராந்தியத்தை இரண்டாகப் பிளக்கும் செயல் என்றே விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர்களான Itamar Ben-Gvir மற்றும் Bezalel Smotrich ஆகியோருக்கு ஜூலை மாதம் முதல் நெதர்லாந்தில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவை விவாதத்திற்கு பின்னர், இஸ்ரேலுக்கான முன்னாள் தூதரான Caspar Veldkamp தெரிவிக்கையில், அவரால் அர்த்தமுள்ள கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் போனது என்றார்.
அரசியல் பதற்றம்
பின்னர் அவரது ராஜினாமா அறிக்கையில், நாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் பதற்றம் நிறைந்த ஒரு காலத்தில் வாழ்கிறோம், இதில் இராஜதந்திரம் எப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியமானது என குறிப்பிட்டிருந்தார்.
காஸாவில் இஸ்ரேலின் போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக நெதர்லாந்தில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. ஜூன் மாதம் ஹேக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100,000 முதல் 150,000 பேர் வரை பங்கேற்றனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் நெதர்லாந்தில் நடந்த மிகப்பெரிய போராட்டமாக இது அமைந்தது. ஜூன் மாதத்திலிருந்து நெதர்லாந்தில் நடந்து வரும் ஒரு இடைக்கால அரசாங்கத்தின் ஒரு பகுதியாக NSC கட்சி இருந்து வருகிறது.
தீவிர வலதுசாரி அரசியல்வாதியான கீர்ட் வைல்டர்ஸ் தனது கட்சியின் அமைச்சர்களை கூட்டணியில் இருந்து விலக்கிக் கொண்டதை அடுத்து நெதர்லாந்தின் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |