தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 -ம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் திகதி அறிவிப்பு
நாட்டின் 17 -வது மக்களவை வருகிற ஜூன் மாதம் 16 -ம் திகதியுடன் நிறைவடைகிறது. எனவே, அதற்கு முன்னதாக தேர்தல் நடத்துவது குறித்து கடந்த சில நாட்களாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
முன்னதாக, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று (பிப்.16) பிற்பகல் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பிர் சிங் சந்து, ஞானேஷ்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, 18 -வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், ஏப்ரல் 19 -ம் திகதி துவங்கி நடைபெறும் எனவும் ஜூன் 4 -ம் திகதி வாக்கு எண்ணிக்கை ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் முதல் கட்ட தேர்தலில் தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20 -ம் திகதி முதல் மார்ச் 27 -ம் திகதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |