ஒரு மனிதன் தவறு செய்தால் ED துறையையே தவறாக சொல்ல முடியாது: அண்ணாமலை
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற நிலையில், மொத்த துறையையுமே தவறு சொல்ல முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ED அதிகாரி கைது
திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீது அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்வதற்கு அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார்.
பின்னர், பணத்தை பெற்ற அங்கித் திவாரி திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலை கூறியது..,
இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரி கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "ஒருவர் தவறு செய்தால் மொத்த அமலாக்கத்துறையையே தவறாக சொல்லிவிட முடியாது. தமிழக காவல்துறையில் ஒருவர் தவறு செய்தால் மொத்த காவல்துறையையும் மோசம் என்று சொல்ல முடியாது.
தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை நாம் அரசியலாக பார்க்க கூடாது. தமிழக அரசியலில் குறைவான மெச்சூரிட்டி கொண்ட அரசியல்வாதிகள் தான் இருக்கின்றனர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |