தக்காளிப்பழங்களில் நோய்க்கிருமிகள்... அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய அமைப்பு
தக்காளிப்பழங்களில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுவருவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பான EFSA அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தக்காளிப்பழங்களில் நோய்க்கிருமிகள்...
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், 2025ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வரை ஐரோப்பிய நாடுகளில் 289 பேர் இந்த தக்காளிப்பழங்களிலிருந்த சால்மோனெல்லா கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ECDC தெரிவித்துள்ளது.
ECDC அறிக்கையின்படி, ஐரோப்பாவில் ஆஸ்திரியா (59), குரோஷியா (3), செக்கியா (11), டென்மார்க் (10), எஸ்டோனியா (1), ஜெர்மனி (68), பின்லாந்து (3), பிரான்ஸ் (24), அயர்லாந்து (3), இத்தாலி (78), லக்சம்பர்க் (2), நெதர்லாந்து (4), நோர்வே (4), ஸ்லோவாக்கியா (5), ஸ்லோவேனியா (8), ஸ்வீடன் (6) ஆகிய நாடுகளில் சால்மோனெல்லா கிருமிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே, இங்கிலாந்தில் 29 பேரும், அமெரிக்காவில் 8 பேரும், கனடாவில் 5 பேரும் தக்காளிப்பழங்களிலிருந்த சால்மோனெல்லா கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த கிருமிகள் முதன்முதலாக இத்தாலியிலுள்ள சிசிலித் தீவில் செர்ரி தக்காளிப்பழங்களிலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆக, பல நாடுகளிலிருந்து காய்கறிகள் பழங்கள் வாங்குவதால், பல நாடுகளுக்கிடையில் இந்த தொற்று தொடர்வதாகவும், எதிர்காலத்திலும் அது தொடரக்கூடும் என்றும் ECDC எச்சரித்துள்ளது.
ஆகவே, மக்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்ய, அவற்றை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் நன்றாக கழுவி பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |