சிறுமியைக் கடத்தி சூட்கேசில் அடைத்து தெருத்தெருவாக இழுத்துச் சென்ற நபர்: பதறவைத்த ஒரு சம்பவம்
பிலிப்பைன்ஸ் நாட்டில், 8 வயது சிறுமி ஒருத்தியைக் கடத்தி, சூட்கேசில் அடைத்து, தெருத்தெருவாக இழுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெருத்தெருவாக இழுத்துச் சென்ற நபர்
பிலிப்பைன்சிலுள்ள Bakilid என்னுமிடத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்த Jin Nichole You (8) என்னும் சிறுமி, வியாழக்கிழமை காலை மாயமானாள்.
கவலையடைந்த சிறுமியின் தாயாகிய Tyree Rendal அந்தக் கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள CCTVகமெரா காட்சிகளை ஆராய்ந்துள்ளார். அப்போது, முகத்தை மறைக்கும் வகையில் உடையணிந்த ஒருவர், அந்தக் குடியிருப்பிலிருந்து பெரிய சூட்கேஸ் ஒன்றை இழுத்துச் செல்வதைக் கண்ட அவர், உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
அந்த நபர் அந்த சூட்கேசை தெருத்தெருவாக இழுத்துச் செல்லும் காட்சிகள் பல CCTV கமெராக்களில் பதிவாகியிருக்க, தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார், அன்று மாலையே Mandue என்னுமிடத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சிறுமி Jinஐக் கண்டுபிடித்தனர்.
குற்றவாளி யார்?
சிறுமி Jinஐக் கடத்தியது, அவள் வாழும் குடியிருப்பில் வேலை செய்யும் Godiflor Rama (32) என்னும் நபர் ஆவார்.
அவர் அந்தச் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டாரா என விசாரிக்கும்போது, தான் அந்த சிறுமியை எதுவும் செய்யவில்லை என்றும், அதற்காக அவளைக் கடத்தவில்லை என்றும், தான் அவர்கள் வீட்டிலிருந்து பைகள் போன்ற பொருட்களைத் திருடுவதாக அவர்கள் குற்றம் சாட்டியதாலேயே அவர்களுடைய மகளைக் கடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குழந்தை கிடைத்துவிட்டதால் அவளது பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர். தங்கள் பிள்ளையை விரைவாகக் கண்டுபிடித்த பொலிசாருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக சிறுமியின் தாயாகிய Tyree தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |