தேர்தல் வெற்றி செல்லாது! தீர்ப்பை எதிர்த்து தமிழக எம்பி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்திய மாநிலம் தமிழக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மக்களவை தொகுதி வெற்றி செல்லாது
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேனி மக்களவை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவர், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை மறைத்துள்ளார். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓ.பி.ஆர் வெற்றி பெற்றுள்ளார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவில், தேனி மக்களவை தொகுதி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் வேற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |