எலான் மஸ்கிற்கு விழுந்த பேரிடி! காலக்கெடுவை தவறவிட்டதால் எக்ஸ்தளத்தை முடக்கிய நாடு
பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை 24 மணிநேரத்தில் நியமிக்க வேண்டும் என எலான் மஸ்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எக்ஸ் தளம்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் சமூக வலைத்தளத்தை கைப்பற்றி எக்ஸ் என அதன் பெயரை மாற்றினார். அதுமட்டுமின்றி மேலும் பல மாற்றங்களை எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.
இந்நிலையில் எக்ஸ் தளம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில்தான் இந்த முடக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் மஸ்க்தான்.
அதாவது, எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், பிரேசிலில் உள்ள அலுவலகத்தை மொத்தமாக மூடிய மஸ்க், அதில் பணியாற்றிய ஊழியர்களை அதிரடியாக நீக்கினார்.
எனினும், அந்நாட்டில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரேசில் உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது.
மஸ்க் பதிலடி
தங்கள் நாட்டில் எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணிநேரத்தில் நியமிக்க வேண்டும் எனவும், தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் எனவும் உத்தரவிட்டது.
சுமார் 2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் எக்ஸ் தளத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், பிரேசில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவினை ஏற்க முடியாது என மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்" என கூறியுள்ளார்.
முடக்கம்
இந்த நிலையில் நீதிபதியின் உத்தரவுக்கு இணங்க மறுத்ததைத் தொடர்ந்து, இணையம் மற்றும் அதன் மொபைல் செயலில் இரண்டிலும் எக்ஸ் தளம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் எக்ஸ் தளத்தை அணுக முடியாது.
தங்கள் உத்தரவுகளுக்கு இணங்கும் வரை எக்ஸ் தளம் இடைநிறுத்தப்படும் என நீதிபதி கூறினார். மேலும், VPNகளைப் பயன்படுத்தும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு தினசரி 50,000 reais (8,900 டொலர்கள்) அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |