ரஷ்யா தொடர்புடைய எண்ணெய் வர்த்தகர்களை இலக்கு வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்ய எண்ணெய் விற்பனைகளுக்கு எதிராக வர்த்தகர்களை குறிவைத்து ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகளை விதித்தது.
இதுவரை 19 தடைகள்
உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு நிதியளிக்க உதவும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான மேற்கத்திய தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவிற்கு உதவியதற்காக வர்த்தகர்கள் முர்தாசா லக்கானி மற்றும் எதிபார் ஐயூப் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை 19 தடைகளை விதித்துள்ளது, ஆனால் ரஷ்யா பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து, இன்னும் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெயை மலிவு விலையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் விற்பனை செய்து வருகிறது.
இதில் பெரும்பகுதி மேற்கத்திய கடல்சார் தொழிலுக்கு வெளியே இயங்கும் சட்டத்திற்கு புறம்பான கப்பல்கள் குழுவைப் பயன்படுத்தி கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.
சமீபத்திய ஐரோப்பிய ஒன்றியத் தடைகள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடன் ஐரோப்பிய நாடுகளின் குடிமக்கள் வணிகம் செய்வதைத் தடைசெய்கின்றன.
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மொத்தம் 2,600க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பட்டியலிட்டுள்ளது. மேலும், ரஷ்யாவிற்காக பணியாற்றும் எண்ணெய் கப்பல்களை ஆதரிக்கும் ஒன்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றியம் குறிவைத்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் ஆகியவற்றுடன் தொடர்புடைய வணிகர்களையும், டேங்கர்களை சொந்தமாக வைத்து நிர்வகிக்கும் கப்பல் நிறுவனங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்டுள்ளது.

கப்பல்களின் எண்ணிக்கை 600
மேலும், இந்த வாரம் ரஷ்யாவிற்காக செயல்படும் 40க்கும் மேற்பட்ட கப்பல்களை ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிடும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள், இதனால் மொத்த கப்பல்களின் எண்ணிக்கை சுமார் 600 ஆக உயரும்.
ஐரோப்பிய ஒன்றியத்தால் குறிவைக்கப்பட்டவர்களில் கனேடிய-பாகிஸ்தான் எண்ணெய் வர்த்தகர், வர்த்தக நிறுவனமான மெர்கன்டைல் & மேரிடைமின் தலைமை நிர்வாக அதிகாரி முர்தாசா லக்கானியும் ஒருவர்.

குறிப்பாக, ரஷ்யாவில் இருந்து உருவாகும் அல்லது ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அல்லது பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பல்களை முர்தாசா லக்கானி கட்டுப்படுத்துகிறார்.
லக்கானியின் Mercantile & Maritime குழுமத்திற்கு லண்டன் மற்றும் சிங்கப்பூரில் அலுவலகங்கள் செயல்படுகின்றன. அனார் மடட்லி மற்றும் தலத் சஃபரோவ் ஆகியோருடன் ஐயூப் என்பவரும் ஐரோப்பிய ஒன்றியத்தால் குறிவைக்கப்பட்டுள்ளார்.
2ரிவர்ஸ் குழுமம் என மறுபெயரிடப்பட்ட வர்த்தக நிறுவனமான கோரல் எனர்ஜியுடனான அவர்களின் தொடர்பு இதனால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |