பிரித்தானியாவை அடுத்து... இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
காஸாவில் ஏற்பட்டுள்ள கொடுந்துயர நிலைக்கு மத்தியில், இஸ்ரேலுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தம்
காஸா பகுதியின் முழு பொறுப்பையும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்றும், காஸாவில் குடியிருக்கும் பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்ததை அடுத்து,
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் காஸாவில் புதுப்பிக்கப்பட்ட இராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதுடன், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்திய நாட்களில் இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. மட்டுமின்றி, காஸா பகுதியை மொத்தமாக கைப்பற்றும் வரையில் ஓய்வதில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், காஸாவில் நடந்தேறும் நெருக்கடிகளின் மத்தியில், இஸ்ரேலுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவளித்ததாக கல்லாஸ் கூறியுள்ளார்.
காஸாவில் நிலைமை பேரழிவின் விளிம்பில் உள்ளது. இஸ்ரேல் அனுமதித்த உதவி நிச்சயமாக வரவேற்கத்தக்கது, ஆனால் அது வெறும் கண் துடைப்பு நாடகம். உதவிகள் உடனடியாக, தடையின்றி, அளவில் அதிகமாக அளிக்கப்பட வேண்டும், ஏனென்றால் இதுதான் தற்போதையத் தேவை என்று கல்லாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
வர்த்தகப் பேச்சுவார்த்தை
இதனிடையே பாராளுமன்றத்தில் பேசிய பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், ஐரோப்பிய ஒன்றிய முடிவை வரவேற்று, 27 உறுப்பு நாடுகளில் 17 நாடுகள் இந்த நடவடிக்கையை ஆதரித்ததாகக் கூறினார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை பிரித்தானியா இடைநிறுத்தியதுடன், அதன் தூதரை வரவழைத்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தது.
அத்துடன் மேற்குக் கரை குடியேறிகள் மீது மேலும் தடைகளை அறிவித்தது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து காஸாவிற்குள் மருத்துவம், உணவு மற்றும் எரிபொருள் விநியோகங்கள் நுழைவதை இஸ்ரேல் தடுத்துள்ளது.
இதனால் அடுத்த அடுத்த இரண்டு நாட்களில் 14,000 சிறார்கள் பட்டினியால் இறக்கும் மிக மோசமான சூழல் காஸாவில் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி தெரிவிக்கையில், மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்பதற்கான வழி தாக்குதல் அல்ல என்றும், உதவித் தடையை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
மேலும் இஸ்ரேல் அரசாங்கத்தின் சில பிரிவுகளில் தீவிரவாதம் ஊடுருவியுள்ளதையும் அவர் கண்டித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |