கடுமையான பின்விளைவுகள் இருக்கும்... ஐரோப்பாவை குறிவைக்கும் ட்ரம்புக்கு பதிலடி
கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் கடுமையான வரி விதிப்பை ஐரோப்பிய ஒன்றியம் வன்மையாக கண்டித்துள்ளது.
கடுமையான எதிர்வினை
ஐரோப்பிய நாடுகள் குறிவைக்கப்படும் என்றால், கடுமையான எதிர்வினை இருக்கும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. பேச்சுவார்த்தை ஊடாக ட்ரம்புடனான வர்த்தக மோதலைத் தவிர்க்க விரும்புவதாக பிரஸ்ஸல்ஸ் இதுவரை சுட்டிக்காட்டி வந்தது.
ஆனால் எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தை குறிவைக்க முற்றிலும் திட்டமிட்டுள்ளதாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் உறுதி செய்ததை அடுத்தே ஐரோப்பிய ஒன்றியம் பதிலளித்துள்ளது.
மேலும், ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது வரிகளை விதிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனங்களை பதிவு செய்கிறது,
வரி விதிப்பு தேவையற்ற பொருளாதார சீர்குலைவை உருவாக்கி பணவீக்கத்தை அதிகரிக்கும். அவை அனைத்து தரப்பினருக்கும் தீங்கு விளைவிக்கும்.
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு நியாயமற்ற முறையில் அல்லது தன்னிச்சையாக வரிகளை விதிக்கும் எந்தவொரு வர்த்தக கூட்டாளிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக பதிலளிக்கும் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில், ஐரோப்பிய ஒன்றிய தயாரிப்புகளுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படுவது குறித்து அமெரிக்கா தரப்பில் இருந்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் அமுலுக்கு வரும்
அத்துடன், வலுவான, விதிகள் சார்ந்த வர்த்தக அமைப்பிற்குள் வளர்ச்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் குறைந்த கட்டணங்களுக்கு உறுதியளித்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, அமெரிக்காவுடனான அதன் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதிப்பாடு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கான வரி விதிப்பு மிக விரைவில் அமுலுக்கு வரும் என்று ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எங்கள் கார்களை வாங்குவதில்லை, எங்கள் பண்ணை பொருட்களை வாங்குவதில்லை. அவர்கள் கிட்டத்தட்ட எதையும் எங்களிடம் இருந்து வாங்குவதில்லை, மில்லியன் கணக்கான கார்கள் தொடங்கி எல்லாவற்றையும் நாங்கள் அவர்களிடம் இருந்து வாங்குகிறோம், மிகப்பெரிய அளவிலான உணவு மற்றும் பண்ணை பொருட்களும் அதில் அடங்கும் என்றார்.
மேலும், ஐரோப்பிய நாடுகள் மீதான வரி விதிப்புக்கு ஒரு காலக்கெடு இருப்பதாக நான் கூறமாட்டேன், ஆனால் மிக விரைவில் அமுலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் உறுதியாக தெரிவித்துள்ளார். ஆனால், பிரித்தானியாவுக்கு விலக்கு அளிக்கப்படும் என்பதையும் ட்ரம்ப் பதிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |