மகள் ஆசை பட்டதால் மெரினாவுக்கு அழைத்துச் சென்ற தந்தை மரணம்
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகளை அழைத்துச் சென்ற தந்தை உயிரிழந்துள்ளார்.
தந்தை மரணம்
இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெயில் மற்றும் கூட்ட நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த 5 பேரில் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் தொழில் நுட்ப வல்லுநராக வேலை பார்த்து வந்த சீனிவாசனும் ஒருவர். இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு மகன் ஹேமந்த் (15), மகள் வர்ஷா (11) என்று இவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவருடைய மகள் வர்ஷா,மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்று ஆசை பட்டார். இதனால், வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு மகளை அழைத்துக் கொண்டு மெரினாவுக்கு சென்றார்.
பின்னர், நிகழ்ச்சி முடிந்ததும் மகளுடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிய போது சேப்பாக்கம் எம்எல்ஏ ஹாஸ்டல் சாலை அருகே பைக்கில் இருந்து மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.
அப்போது அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறினர்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |