நாடு மொத்தம் தன்னைக் கொண்டாட வேண்டும் என்ற ஆசையில் நபர் செய்த செயல்... 137 பேர்கள் மரணம்
சிலி நாட்டில் மிக மோசமான காட்டுத்தீயில் சிக்கி 137 பேர்கள் மரணமடைந்த விவகாரத்தில் முன்னாள் தீயணைப்பு வீரர் ஒருவர் கைதாகியுள்ளார்.
ஹீரோவாக கொண்டாட வேண்டும்
கடந்த பிப்ரவரி மாதம் சிலியின் வால்பரைசோ பிராந்தியத்தில் உருவான நான்கு காட்டுத்தீ சம்பவங்களில் ஒன்றில் 39 வயதான குறித்த முன்னாள் தீயணைப்பு வீரருக்கு பங்குள்ளதாக பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முன்னாள் அவசர சேவை ஊழியரான அந்த நபர் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கான சிலியின் தேசிய சேவையில் தன்னார்வலராக பணியாற்றியுள்ளார்.
நாடு மொத்தம் தம்மை ஒரு ஹீரோவாக கொண்டாட வேண்டும் என்ற ஆசையில், அவசர சேவைப்பிரிவில் இணைந்து ஆபத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என திட்டமிட்டு காட்டுத்தீயை உருவாக்கியதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே காட்டுத்தீ ஒன்றை கட்டுப்படுத்த களமிறங்கி, மக்களின் கவனத்தை ஈர்த்து ஹீரோவாக கொண்டாடப்பட்டவர் அந்த நப்ர் என உள்ளூர் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்திருக்காமல் தீயணைப்பு நடவடிக்கைகளில் களமிறங்கி துரிதமாக செயல்பட்டவர் என்பதால் அப்பகுதி மக்கள் அவரை ஒரு ஹீரோவாகவே கொண்டாடியுள்ளனர்.
இரண்டு நகரங்களில்
காட்டுத்தீ சம்பவம் தொடர்பில் குறித்த 39 வயது நபருடன் இதுவரை மூவர் கைதாகியுள்ளனர். இவர்கள் மூவரும் திட்டமிட்டே காட்டுத்தீயை உருவாக்கியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பிப்ரவரி 2ம் திகதி ஏற்பட்ட காட்டுத்தீயானது இரண்டு நகரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தியதுடன் பரவலான அழிவையும் ஏற்படுத்தியது. சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வந்த பகுதியானது, வெப்ப அலை காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
காட்டுத்தீயில் சிக்கி இரண்டு நகரங்களிலும் மொத்தம் 137 பேர்கள் மரணமடைந்ததுடன் 16,000 பேர்கள் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். அத்துடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் மொத்தமாக சாம்பலானது.
500 பேர்களை பலிவாங்கிய 2010 பூகம்பத்திற்குப் பிறகு தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு இதுவென்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |