கூண்டிலிருந்து தப்பிய கரடியால் தாமதமான விமானம்: வெளிநாடொன்றில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
ஈராக் ஏர்வேஸ் விமானம் ஒன்றில், பொருட்கள் வைக்கும் இடத்தில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கரடி ஒன்று தப்பிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திகிலடைந்த பயணிகள்
வெள்ளிக்கிழமையன்று, துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஈராக் ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப்பட தாமதமானதால் சலிப்படைந்திருக்கிறார்கள் பயணிகள். அப்படியிருக்கும் நிலையில் விமானி வெளியிட்ட அறிவிப்பு ஒன்று பயணிகளுக்கு திகிலை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், விமானத்தின் சரக்குகள் வைக்கும் இடத்தில் கரடி ஒன்று கூண்டிலிருந்து தப்பிவிட்டதாக விமானி கூற, பயணிகள் திகிலடைந்துள்ளனர்.
பின்னர் கால்நடை நிபுணர்கள் வந்து, மயக்க ஊசி செலுத்தி, அந்த கரடியை கூண்டிலடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
The National
விமானத்தில் சரக்குகள் வைக்குமிடத்தில் கரடி வந்தது எப்படி?
அந்த கரடி எங்கிருந்து வந்தது, யார் அதைக் கொண்டு செல்வது என்பது போன்ற விடயங்கள் வெளியிடப்படவில்லை.
விமான நிறுவனம், அந்தக் கரடி பக்தாதிலிருந்து துபாய்க்குக் கொண்டு செல்லப்படுவதாக கூற, பெயர் வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொண்ட விமான ஊழியர் ஒருவரோ, அந்தக் கரடி, ஈராக் தலைநகருக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, பயங்கர விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் ஆர்வம் ஈராக்கில், குறிப்பாக பாக்தாதில் அதிகரித்துவருகிறதாம்.
அந்த வகையில் யாரோ ஒருவர் கரடி ஒன்றைக் கொண்டு செல்ல முயற்சிக்கும்போது, அது கூண்டிலிருந்து தப்பியுள்ளது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்குமாறு ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.