Flydubai விமான தாக்குதல்தாரியின் இலக்கு என்ன? பரபரப்பு தகவல்
Flydubai hijacker wanted to crash plane into Tel Aviv airport: Flydubai விமான தாக்குதல்தாரி, அந்த விமானத்தை டெல் அவிவ் விமான நிலையத்தில் மோத விரும்பியதாக தெரிவித்துள்ளார்.
விமானி ஒருவர், துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட Flydubai நிறுவன விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, விமானத்தை தரையில் மோத முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அவரது இலக்கு என்ன என்பது குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய தகவல்
துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட Flydubai நிறுவன விமானம் சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென, விமானத்தை தரையில் மோதவைக்க முயன்றுள்ளார் விமானிகளில் ஒருவர்.

அந்த விமானத்தின் விமானியும், இந்தியருமான ஸ்மித் (Captain Smit Machchhar) அதை தடுக்க முயல, அவரை கோடரி ஒன்றினால் சரமாரியாகத் தாக்கியுள்ளார் அவரது சக விமானி.
விமானத்தைத் தரையில் மோதி, 180 பேரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற அந்த நபருடைய பெயர் ஹமாம் அல் ஹமாமி (29).
அல் ஹமாமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் 9/11 தாக்குதல் பாணியில் தாக்குதல் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
’இஸ்ரேலிலுள்ள Ben-Gurion விமான நிலையத்தில் விமானத்தை மோதச் செய்யவேண்டும் என்பது என் கனவு’ என்று அல் ஹமாமி கூறியதாக இஸ்ரேல் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும், முன்னர், அவ்வப்போது டெல் அவிவ் விமான நிலையத்துக்கு வந்து சென்றுள்ளார் அல் ஹமாமி.
விமான தாக்குதல் தொடர்பில் தகவல்களைத் திரட்டுவதற்காகவே அவர் வந்ததாக கருதப்படுகிறது.
அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பின் தாக்குதல் நடத்த அல் ஹமாமி திட்டமிட, அவரது விமானத்தில் அவருடைய நண்பர்களில் ஒருவர் பயணிப்பது தெரியவந்ததால், அவர் தாக்குதல் திட்டத்தை ஒத்திவைத்ததாகவும் நம்பப்படுகிறது.
மேலும், இஸ்ரேல் தலைமையகத்துக்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் விமானத்தை மோத அல் ஹமாமி திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
பூட்டப்பட்ட விமானிகளின் அறைக்குள் வைத்து, கேப்டன் ஸ்மித்தைக் கொன்றுவிட்டு, விமானத்தை அந்தக் கட்டிடத்தில் மோதி, அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல் பாணியில் அல் ஹமாமி தாக்குதல் ஒன்றை நிகழ்த்தத் திட்டமிட்டதாகவும் இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்துள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.