கெய்ர் ஸ்டார்மர் ஆட்சியில் முதல் சம்பவம்... கடலில் மூழ்கி பலியான புலம்பெயர் மக்கள்
பிரான்சின் வடக்கு கடற்பகுதியில் புலம்பெயர் மக்கள் நால்வர் கடலில் மூழ்கி பலியானதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணத்தின் நடுவே கடலில்
இவர்கள் பிரித்தானியாவை நோக்கிய பயணத்தின் நடுவே கடலில் சிக்கியதாக கூறப்படுகிறது. Boulogne-sur-Mer அருகே மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் 53 பேர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் பயணப்பட்ட நால்வரே மூழ்கி பலியானதாகவும் கூறப்படுகிறது. தற்போது மீட்கப்பட்ட அனைவரும் பிரான்ஸ் அதிகாரிகளின் கவனிப்பில் உள்ளனர்.
இவர்கள் பயணித்த ரப்பர் படகானது சேதமடைய, அதில் கடலில் சிக்கிக்கொண்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர். பிரான்ஸ் நேரப்படி அதிகாலை 4.30 மணியளவில் ரப்பர் படகு பிரித்தானியா நோக்கி நகர்வதை பிரான்ஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து மீட்புப் பணிக்கு என பிரெஞ்சு கடற்படை படகும் ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டன. இந்த நிலையில், மூன்று பேர் தண்ணீரில் சுயநினைவின்றி காணப்பட்டனர், நான்காவது நபர் ரப்பர் படகின் சேதமடைந்த பகுதியுடன் காணப்பட்டார்.
கடுமையான நடவடிக்கைகள்
பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்றதன் பின்னர் ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்று புலம்பெயர் மக்கள் மரணமடைவது முதல் சம்பவம் என்றே கூறுகின்றனர்.

மட்டுமின்றி, ரிஷி சுனக்கின் கனவுத் திட்டமான ருவாண்டா முகாம் என்பது கைவிடப்பட்ட நிலையில், ஆட்கடத்தும் குழுவினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
கடைசியாக ஏப்ரல் 23ம் திகதி பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற நிலையில் பிரெஞ்சு கடற்பகுதியில் ஐந்து பேர் இறந்தனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 19 பேர்கள் இப்படியான சூழலில் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |