சுற்றிவளைத்து ட்ரோன் தாக்குதல்... காஸாவுக்கான உதவிப்பொருட்களுடன் நெருப்பு கோளமான கப்பல்
காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன் பயணப்பட்ட கப்பல் ஒன்று மால்டா கடற்பகுதியில் ட்ரோன்களால் தாக்கப்பட்ட நிலையில், நெருப்பு கோளமாக மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கப்பல் நெருப்பு கோளமாக
கடலில் மூழ்கும் கட்டத்தில் இருக்கும் அந்த கப்பலில் 10 மணி நேரத்திற்கும் மேலாக 30 பேர் கொண்ட குழு ஒன்று உயிருக்கு போராடி வருவதாக SOS அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
FFC என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று தங்களின் கப்பல் சர்வதேச கடற்பகுதியில் தாக்குதலுக்கு இலக்கானதாக உறுதி செய்துள்ளது. வெளியான தகவல்களின் அடிப்படையில், ட்ரோன்களால் சுற்றிவளைத்து தாக்கப்பட்டதில் அந்த கப்பல் நெருப்பு கோளமாக மாறியுள்ளது.
காஸா மக்களுக்கான உதவிப்பொருட்கள் மட்டுமே அந்த கப்பலில் இருப்பதாக FFC தெரிவித்துள்ளது. மேலும், மனித உரிமை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மால்டாவில் இருக்கிறார், அவர் கப்பலில் ஏறியிருக்க வாய்ப்புள்ளதாகவும் FFC குறிப்பிட்டுள்ளது.
ஆனால், பலமுறை SOS அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த நாடும் உதவ முன்வரவில்லை என்றும் FFC தெரிவித்துள்ளது. கப்பலின் முன்பாகம் தாக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை முன்னெடுத்தவர்கள் யார் என்பதில் இதுவரை உறுதியான தகவல் இல்லை என்றே FFC தெரிவித்துள்ளது.
எங்கள் கப்பல் தற்போது மால்டா கடற்பகுதியிலிருந்து 17 கிலோமீற்றர் தொலைவில் சர்வதேச நீரில் உள்ளது, மேலும் இரண்டு முறை ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் எனவும் FFC தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
கடல்சார் சட்டத்தின் கீழ்
கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில், தற்போது 30 சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளனர் என்றும், சர்வதேச கடல்சார் சட்டத்தின் கீழ், மால்டா அதன் எல்லையில் உள்ள ஒரு சிவிலியன் கப்பலின் பாதுகாப்பை உறுதிசெய்து செயல்பட வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது என்றும் FFC தெரிவித்துள்ளது.
இதனிடையே, கப்பலின் ஜெனரேட்டரை வேண்டுமென்றே குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் பணியாளர்களுக்கு மின்சாரம் இல்லாமல் போய்விட்டது மற்றும் கப்பல் மூழ்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் FFC செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், மீட்பு முயற்சிகள் குறித்த பதில் அல்லது இதுவரை எந்த நாடும் முன்வராதது சர்வதேச வழக்கச் சட்டத்தை மீறுவதாகும். இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு பங்கிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ள அவர்,
இஸ்ரேலிய தூதர்கள் அழைக்கப்பட்டு சர்வதேச சட்ட மீறல்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |