உலகளவில் 6ல் 1 நபர் கருவுறாமையால் பாதிப்பு: WHO அதிர்ச்சி தகவல்! இந்தியாவின் நிலை என்ன?
உலக அளவில் 6 ல் 1 நபர் தங்கள் வாழ்நாளில் கருவுறாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் கருவுறாமை
உலகம் முழுவதும் சுமார் 12,241 பதிவுகளின் மெட்டா பகுப்பாய்வை அடிப்படையாக கொண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் ஆறில் ஒரு நபர் கருவுறாமையால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இது உலகின் உயர், நடுத்தர மற்றும் ஏழ்மை என அனைத்து பிரிவினர் மத்தியிலும் நிகரான அளவில் காணப்படுவதாகவும், இவை உலகின் மிகப்பெரிய சுகாதார சவால்களை குறிப்பதாகவும் WHO தெரிவித்துள்ளது.
இந்த கருவுறா தன்மை பாதிப்பு உயர் வருமானம் கொண்ட நாடுகளில் 17.8 % ஆகவும், குறைந்த மற்றும் ஏழ்மை நாடுகளில் 16.5% ஆகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக உலகளவில் வயது வந்தோரில் சராசரியாக சுமார் 17.5% சகவிகிதம் இந்த கருவுறாதன்மை காணப்படுகிறது என்றும் உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ”தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கை முக்கியமான உண்மை ஒன்றை வெளிப்படுத்துகிறது, அது என்னவென்றால் கருவுறாமை பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு காட்டாது என்பதே” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கருவுறாமை விகிதம்
WHO அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் பொது கருவுறாமை விகிதம் 20% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 2008-2010 வரை 86.1% ஆக இருந்த கருவுறுதல், தற்போது 68.7% ஆக குறைந்துள்ளது. 2008-10 மற்றும் 2018-20 க்கு இடையில், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் அதிகபட்ச கருவுறுதல் விகிதத்தை (29.2%) இழந்துள்ளது.
அதனை தொடர்ந்து டெல்லி, 28.5%, உத்தரபிரதேஷ் 24%, ஜார்கண்ட் 24% மற்றும் ராஜஸ்தான் 23.2% கருவுறுதல் விகிதத்தை இழந்துள்ளது.