55,000 பேர்களை பலிகொண்ட பயங்கர நிலநடுக்கம்: தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட கூகிள்
துருக்கியை மொத்தமாக உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தின் போது மக்களை எச்சரிக்க தங்களின் தொழில்நுட்பம் தவறியதாக கூகிள் நிறுவனம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.
முறையாக கணிக்கவில்லை
2023ல் துருக்கியை உலுக்கிய இந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் 55,000 பேர்களுக்கும் அதிகமானோர் பலியாகினர். காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சம் கடந்தது.
7.8 மற்றும் 7.5 என இருமுறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா முழுவதும் கட்டிடங்கள் தரைமட்டமாகின. சம்பவத்தின் போது கூகிள் நிறுவனத்தின் AEA அமைப்பு செயல்பாட்டில் இருந்த போதிலும், முதல் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் தீவிரத்தை முறையாக கணிக்கவில்லை என்றே ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, நிலநடுக்கம் உருவானதன் மையப்பகுதியிலிருந்து 160 கி.மீ.க்குள் 10 மில்லியன் மக்கள் வரை வசித்திருந்தும், கூகிள் நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், வெறும் 469 எச்சரிக்கைகளை மட்டுமே தங்கள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
மட்டுமின்றி, சுமார் அரை மில்லியன் பயனர்களுக்கு விழிப்புடன் இருங்கள் என மட்டும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கூகிளின் இந்த எச்சரிக்கை அமைப்பு துருக்கியில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மொபைல் போன்களைக் கொண்ட ஆண்ட்ராய்டு சாதனங்களில் இயங்குகிறது.
எச்சரிக்கை அமைப்பு
ஸ்மார்ட்போன்களில் உள்ள சென்சார்கள் மூலம் தரையின் அசைவுகளைக் கண்டறிந்து, வலுவான நிலநடுக்கம் வருவதற்கு முன்பு பயனர்களுக்கு விரைவாகத் தெரிவிக்கிறது.
நிலநடுக்கத்தின் போது, கூகிளின் இந்த எச்சரிக்கை அமைப்பு, நிலநடுக்கத்தின் அளவு 4.5 முதல் 4.9 வரை இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. உண்மையில் 7.8 என பதிவானது.
பிப்ரவரி 6ம் திகதி விடிகாலை மொத்த மக்களும் தூக்கத்தில் இருக்கும் வேளை, 4.17 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கூகிள் அமைப்பு உடனடி நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை விடுத்திருந்தால், மொபைல் அலறும் சத்தம் கேட்டு விழித்துக்கொள்ளும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு விரைந்திருப்பார்கள்.
ஆனால், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு இந்த முக்கியமான எச்சரிக்கையைப் பெற்ற ஒருவரைக் கூட பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே பிபிசி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இருப்பினும் அதே நாளில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டபோது கூகிள் எச்சரிக்கை அமைப்பு சுமார் 8,158 மொபைல்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |