அமெரிக்க கனவுடன் புறப்பட்ட இளம் வயது இந்திய தம்பதி: வெளிநாட்டில் பிணைக்கைதியான கொடுமை
அமெரிக்காவில் நுழையும் பொருட்டு சட்டவிரோதமாக முகவர் ஒருவரின் திட்டத்தின்படி ஈரானுக்கு சென்ற இளம் வயது இந்திய தம்பதி பிணைக்கைதியாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் சிக்கியுள்ள தம்பதி
இந்திய மாநிலம் குஜராத்தை சேர்ந்த அந்த தம்பதி தற்போது ஈரானில் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் நரோடா பகுதி மற்றும் அகமதாபாத் நகர குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
Source: Royal Canadian Mounted Police
அகமதாபாத் நகரின் நரோடா பகுதியை சேர்ந்தவர்கள் 29 வயதான பங்கஜ் மற்றும் நிஷா பட்டேல் தம்பதி. இவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் பொருட்டு ஐதராபாத் பகுதியை சேர்ந்த முகவர் ஒருவரின் உதவியை நாடியுள்ளனர்.
அவரது திட்டத்தின்படி, விமானம் மூலமாக ஈரானின் தெஹ்ரான் நகரில் தரையிறங்கியுள்ளனர். அங்கிருந்து அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தெஹ்ரான் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர்களை பாகிஸ்தான் முகவர் ஒருவர் சந்தித்து, அவர்களை ஹொட்டல் ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார்.
பெருந்தொகை பணம் கேட்டு மிரட்டல்
ஆனால், அந்த நபர் அவர்களை பிணைக்கைதியாக சிறைவைத்து, பெருந்தொகை பணம் கேட்டு மிரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, அந்த பாகிஸ்தான் முகவரும் அவருடன் இருப்பவர்களும் பங்கஜை சரமாரியாக தாக்கி காணொளியாக பதிவு செய்து அதை அவரது குடும்பத்தினருக்கு பகிர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பெருந்தொகை பணம் அளித்தால் மட்டுமே அந்த தம்பதியை விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் நிஷா பட்டேல் என்ன ஆனார் என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
குறித்த சம்பவம் வெளிநாட்டில் நடந்துள்ளதால், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை இந்த விவகாரம் தொடர்பில் நாட இருப்பதாக அகமதாபாத் நகர குற்றப்பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பத்திரமாக அந்த தம்பதியை மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்படும் என அகமதாபாத் நகர குற்றப்பிரிவு பொலிசார் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |