குழந்தைகள் மருத்துவமனையின் அடித்தளத்தில் ஹமாஸின் பதுங்கு குழிகள்: ஆதாரங்களை கைப்பற்றிய இஸ்ரேல்
காசாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் ஹமாஸ் படையினரின் பதுங்கி இருப்பதற்கான அடையாளங்கள் கிடைத்து இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் போர் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரை சுற்றி வளைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அத்துடன் காசாவின் மருத்துவமனை ஒட்டியுள்ள பகுதிகளையும் இஸ்ரேலிய படையினர் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தகர்த்து வருகின்றனர்.
மருத்துவமனைகளை இஸ்ரேல் தாக்கியதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் அதே நேரத்தில் மருத்துவமனைகளை ஹமாஸ் படையினர் தங்களின் பதுங்கும் இடங்களாக வைத்து இருப்பதாக இஸ்ரேல் புகார் தெரிவித்து வருகிறது.
ஆதாரத்தை வெளியிட்ட இஸ்ரேல்
இந்நிலையில் காசாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தை ஹமாஸ் அமைப்பினர் தங்களது பதுங்கு குழிகளாக பயன்படுத்தி வருவதாகவும், சிறை பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் பதுக்கி வைத்து இருக்கலாம் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
டெல் அவிவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி, இது தொடர்பான புகைப்பட ஆதாரம் கிடைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காசாவில் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கும் ரன்தீஸி மருத்துவமனையில் சோதனை நடத்தியதில், ஹமாஸ் படையினரின் பதுங்கு குழிகள் இருப்பதை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் மருத்துவமனை அடிதளத்தில் தற்கொலைப் படையினர்களின் ஆயுதங்கள், வெடிகுண்டுகள், ஏகே 47 துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |