தென் தமிழகத்தில் பெய்யும் கனமழையால் தொடரும் சோகம்.., 2 பேர் பரிதாபமாக மரணம்
நேற்று முன்தினத்தில் இருந்தே தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் வீடுகள் இடிந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் கனமழை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் போக போக இடைவிடாமல் கனமழையாக பெய்ய தொடங்கியது.
நேற்று அதிகாலை 4 மணி முதலே பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
2 பேர் மரணம்
திருநெல்வேலி மாவட்டத்தின் ரயில் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், நெல்லை டவுன், பாளையங்கோட்டை, நகர்ப்பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாளையங்கோட்டையில் கனமழையால் சிவகுமார் என்பவரின் வீடு இடிந்து விழுந்த விபத்தில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், மேலப்பாளையம் நடராஜபுரம் பகுதியில் பட்டத்தி என்ற 75 வயது மூதாட்டி ஒருவர் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |