துருக்கி ஹோட்டலில் நடந்த பயங்கர தீ விபத்து: 76 பேர் உயிரிழப்பு: 4 பேர் அதிரடி கைது
துருக்கியின் ஸ்கை ரிசார்ட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 76 பேரின் உயிரை பறித்துள்ளது.
துருக்கியில் தீ விபத்து
துருக்கியின் போலு(Bolu) மாகாணத்தில் உள்ள பிரபலமான ஸ்கை ரிசார்ட்டான கர்தல்காயாவில்(Kartalkaya) உள்ள கிராண்ட் கார்டால் ஹோட்டலில்(Grand Kartal Hotel) புதன்கிழமை அதிகாலை ஒரு பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் குறைந்தது 76 பேர் உயிரிழந்தனர், மேலும் 51 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹோட்டலின் உணவகத்தில் அதிகாலை 3:30 மணிக்கு தீ பற்றியது, பின்னர் 12 மாடி கட்டிடத்தை முழுமையாக தீ சூழ்ந்தது.
161 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் விபத்து நேரத்தில் 234 விருந்தினர்கள் தங்கியிருந்தனர்.
இதனால் ஏராளமான விருந்தினர்கள் தீ விபத்தில் சிக்கிக்கொண்டு பெரும் அவதிக்குள்ளாகினர்.
வெளியான வீடியோ காட்சிகள்
இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மேலும், மேல் தளங்களில் இருந்து தாழ்வாரங்கள் வரை படுக்கைத் துணிகளை கட்டி இறக்கி தப்பிக்க முயன்ற விருந்தினர்களின் துயரமான காட்சிகள் வெளிவந்துள்ளது.
பயங்கரமான முறையில், தீயில் இருந்து தப்பிக்க முயன்று கட்டிடத்திலிருந்து குதித்த குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர்.
4 பேர் கைது
துருக்கிய அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து, ஹோட்டல் உரிமையாளர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |