ஹவுதிகளின் பழிக்குப் பழி தாக்குதல்: சவுதி சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்
சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் விமான நிலையம் மீது தாக்குதல்
சமீபத்தில் ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரில் அமைந்துள்ள சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரானிய விமானம் ஒன்று சனா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்ததை அடுத்து தாக்குதல் நடத்தியதாக ஏமன் அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து அந்த விமானம் ஹுதைதா விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ஆனால் இந்த தாக்குதலை சவுதி அரேபியா நடத்தியதாக ஹவுதி அமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது.
ஹவுதிகளின் பழிக்குப் பழி தாக்குதல்
இந்நிலையில், சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிக்குப் பழி வாங்கும் விதமாக சவுதியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹவுதி படையினர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த போர்நிறுத்த உடன்படிக்கையின் பிறகு, சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை ஹவுதிகளின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
டெலிகிராமில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், சனா விமான நிலையம் மீதான முற்றுகை நீங்கும் வரை, சவுதி அரேபியாவின் வான்வெளியை சர்வதேச சிவில் விமானங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
இதனிடையே ஹவுதிகள் நடத்திய தாக்குதலில், அப்ஹா சர்வதேச விமான நிலையத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |