இஸ்ரேல் நோக்கி பயணிக்கும் எந்த கப்பலானாலும்... பகிரங்க மிரட்டல் விடுத்த ஹூதிகள்
இஸ்ரேலுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களையும் அவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதை பொருட்படுத்தாமல் குறிவைக்க இருப்பதாக யேமனின் ஹூதி இயக்கம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
ஹூதி இயக்கம் பகிரங்க மிரட்டல்
அத்துடன் இஸ்ரேலிய துறைமுகங்களை பயன்படுத்துவதற்கு எதிராகவும் அனைத்து சர்வதேச கப்பல் நிறுவனங்களையும் ஹூதி இயக்கம் எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்துவரும் மிக மோசமான போருக்கு மத்தியில் ஈரான் ஆதரவு ஹூதிகளால் மத்திய கிழக்கில் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
@reuters
சமீப நாட்களில் செங்கடல் மற்றும் அதன் பாப் அல்-மண்டப் ஜலசந்தியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய பல கப்பல்களை ஹூதிகள் தாக்கி கைப்பற்றியுள்ளனர். குறித்த வழித்தடமானது உலகின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதி முன்னெடுக்கபப்ட்டு வருகிறது.
இதனிடையே, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தான் தங்களின் நடவடிக்கைகள் இருப்பதாக ஹூதி தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், கப்பல்கள் மீதான தாக்குதலானது ஈரான் முன்னெடுக்கும் பயங்கரவாதம் என குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், சர்வதேச கடல் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எனவும் தெரிவித்துள்ளது.
ஹூதி தரப்பு தெரிவிக்கையில், நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் வரையில் இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு செல்லும் அனைத்து கப்பல்களும் செங்கடல் மற்றும் அரபிக்கடலில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
மேலும், காஸா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகள் கிடைக்கவில்லை என்றால் செங்கடல் ஊடாக இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களும், எந்த நாட்டினராக இருந்தாலும், தங்களது ஆயுதப் படைகளுக்கு இலக்காகிவிடும் என ஹூதி தரப்பு அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளது.
நிதானம் காட்ட வேண்டும்
அத்துடன், தங்களின் இந்த முடிவு உடனடியாக அமுலுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளை இலக்கு வைத்துள்ள பல்வேறு குழுக்களில் ஈரான் ஆதரவு ஹூதிகளும் ஒன்று என்றே கூறப்படுகிறது.
@reuters
சமீபத்தில் சர்வதேச கடல் பகுதியில் மூன்று வணிக கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. யேமன் மற்றும் அதன் செங்கடல் கடற்கரையின் பெரும்பகுதியை ஆளும் ஹூதிகள், இஸ்ரேலிய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருந்த பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலையும் கடந்த மாதம் கைப்பற்றினர்.
இதனையடுத்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை கண்டித்துள்ளன, ஹூதிகளுக்கு ஆதரவளிப்பதில் ஈரானின் பங்கையும் குற்றம் சாட்டின.
ஆனால் தங்கள் ஆதரவு குழுக்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், செயல்படுவதாகவும் ஈரான் பதிலளித்துள்ளது. இந்த நிலையில், கப்பல்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்கா நிதானம் காட்ட வேண்டும் என்று சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |