அரசியல் வலையில் விழ விரும்பவில்லை.., கட்சிகளுக்கு பிரகாஷ் ராஜ் வெளிப்படையான பதில்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மூன்று முக்கிய கட்சிகள் வலியுறுத்தி வருவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பையும் தாண்டி பல சமூக விடயங்களுக்கு குரல் கொடுத்து வருபவர். குறிப்பாக பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.
அந்தவகையில், பாஜகாவிற்கு எதிராகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் பல கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
இதனால், பாஜகவினரிடம் இருந்து மிரட்டல்கள் வந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மகர சங்கராந்தியை முன்னிட்டு மோடி தனது இல்லத்தில் பசுக்களுக்கு உணவளிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. அதற்கு பிரகாஷ் ராஜ் தனது பதிவில், 'உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களின் நாட்டைச் சேர்ந்த ஒருவர், இது என்ன முரண்பாடு” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அரசியலில் விழ விரும்பவில்லை
இந்நிலையில், நேற்று கேரளாவில் நடைபெற்ற இலக்கிய கலை விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியை விமர்சிப்பதால், நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மூன்று கட்சிகள் கூறுகின்றன.
ஆனால், அவர்களின் அழைப்பை நான் ஏற்கவில்லை. அவர்களிடம் இருந்து வரும் போன் அழைப்பை நான் துண்டித்துவிட்டேன். அவர்களது அரசியல் வலையில் நான் விழ விரும்பவில்லை.
ஏனெனில் அவர்கள் மக்களுக்காக வரவில்லை, சித்தாந்தத்திற்காக வரவில்லை. மோடியை விமர்சிப்பதால் நல்ல வேட்பாளர் என்கிறார்கள். எந்த அரசியல் கட்சியிலும் உண்மையில்லை. அதனால் தான் நல்ல வேட்பாளர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்" என்று பேசியுள்ளார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |