ஐரோப்பாவின் முதல் நாடாக அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கிய பிரபல நாடு! வெளியான அறிவிப்பு
ஐரோப்பிய நாடுகளில், அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கிய முதல் நாடாக ஐஸ்லாந்து அறிவித்துள்ளது.
உலக அளவில் இன்னும் கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரவில்லை. ஒவ்வொரு விதமாக இந்த கொரோனா வைரஸ் உருமாறி வருவதால், இதைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகள், அந்த நோயின் தாக்கத்தில் இருந்து எதிர்த்து போராட உதவும் என்பதால், தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, ஐஸ்லாந்து, அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற உள்நாட்டின் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுடைய பழைய வாழ்க்கைக்கு மெல்ல, மெல்ல திரும்ப அதை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக, நாட்டின் சுகாதார அமைச்சர் Svandís Svavarsdóttir கூறியுள்ளார்.
ஐஸ்லாந்து அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வெளியிட்டிருக்கும் தகவலில், மக்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். அதாவது அவர்கள் கூடும் கடைகளின் கதவுகள், மக்கள் அதிகம் தொடும் பொருட்கள் மீது அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்
நாட்டின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் órólfur Guðnason, மீண்டும் கொரோனா கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நம்பிக்கையுடன் கூறிய பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவர், தடுப்பூசிகள் 100 சதவீதம் பயனுள்ளதாக இல்லை என்றாலும், அது நோயை எதிர்ப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் கடந்த 15 மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான விதிகளை, மீண்டும் விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் படி பார்த்தால், இங்கு இதுவரை கொரோனாவால் 6,637 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர், 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜுன் 15-ஆம் திகதி முதல் இங்கு புதிய கொரோனா பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.