பாகிஸ்தானில் வெடித்த வன்முறை: முடங்கிய இணைய சேவையால் பல மில்லியன் கோடி ரூபாய் இழப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது நடவடிக்கையை தொடர்ந்து வெடித்த வன்முறையால் நாட்டின் ரூபாய் மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
இம்ரான் கைது
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் நாடு முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒட்டுமொத்த நாட்டின் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.
AFP
கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நீதிமன்றம் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, வன்முறை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ரூ.2.46 பில்லியன் இழப்பு
பாகிஸ்தானில் வெடித்த இந்த வன்முறைகளால் மூன்று நாள் வரை இணையம் முடுக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.2.46 பில்லியன் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தரவுகளின் படி, நாட்டின் மொபைல் பிராட்பேண்ட் சேவைகளால் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.28.5 கோடி வருவாய் ஈட்டப்படும் நிலையில், மூன்று நாட்கள் வரை இணையம் துண்டிக்கப்பட்டதால் நாட்டிற்கு 86 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவு
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை பெற போராடி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரணமான சூழ்நிலையில், நாட்டின் பொருளாதார துறை கடுமையான இழப்பை சந்தித்துள்ளது.
இதனால் பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட ₹298.93 ரூபாய் என்ற அளவை தொட்டுள்ளது.