அரிசி ஏற்றுமதி தடைக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க இந்தியா முடிவு: இறுக்கமடையும் விநியோகம்
இந்தியாவில் எகிறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் நரேந்திர மோடி அரசாங்கம் திணறிவரும் நிலையில், அரிசி ஏற்றுமதி தடைக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புழுங்கல் அரிசி ஏற்றுமதி
இதனால் உலகளாவிய அரிசி விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் நெருக்கடியான சூழல் உருவாகும் என்றே கூறப்படுகிறது. முதற்கட்டமாக புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு வரி விதிக்க இந்திய அரசு பரிசீலித்து வருவதாக துறை சார்ந்த நிபுணர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.
@reuters
மேலும், இந்த விவகாரத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதுடன் வரி விதிப்பை செயல்படுத்துவதற்கு எந்த உறுதியான ஆலோசனைகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
தெற்காசிய நாடான இந்தியா திடீரென்று பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிகளுக்கு தடை விதித்ததை அடுத்து, ஆசியாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரிசியின் தேவை உயர்ந்தது.
அத்துடன் தாய்லாந்தின் அரிசி உற்பத்தி மீது பல நாடுகளின் பார்வை திரும்பியது. 2024ல் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நரேந்திர மோடி அரசாங்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் முன்னெடுத்து வருகிறது.
கோதுமை மற்றும் சர்க்கரை ஏற்றுமதி
இதன் ஒருகட்டமாக வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்ததுடன், சமீபத்தில் வெங்காய ஏற்றுமதிக்கு வரலாற்றில் முதன்முறையாக 40 சதவீத வரி விதித்தது. இதனிடையே, புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு வரி விதிக்க இந்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படும் தகவலுக்கு நிதி அமைச்சக செய்தித் தொடர்பாளர் பதிலளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்தியா ஏற்கனவே குறுநை அரிசி மற்றும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை தடை செய்திருந்தது. மட்டுமின்றி, கோதுமை மற்றும் சர்க்கரை ஏற்றுமதியையும் கட்டுப்படுத்தியுள்ளது.
மேலும் கோதுமை மீதான 40 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்வது மற்றும் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக மாநில இருப்புக்களில் இருந்து தக்காளி மற்றும் தானியங்களை விற்பனை செய்வது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, நெல் விளையும் முக்கிய மாநிலங்களான மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இந்த பருவத்தில் இதுவரை இயல்பை விட 15 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. இதுவும் உள்ளூர் அரிசி விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளதாக கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |