இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை அனுப்பிய இந்தியா
இலங்கையின் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில் இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் டீசல் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியா இலங்கையின் ஒரு உறுதியான கூட்டாளி மற்றும் உண்மையான நண்பன். உயர் ஸ்தானிகர் (கோபால் பாக்லே) 40,000 மெட்ரிக் டன் எரிபொருள் சரக்குகளை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் இலங்கைக்கு ஒப்படைத்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வெளிநாட்டு இருப்புக்கள் குறைந்துவிட்டதால் பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்டுள்ள அவசர ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்தியாவின் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிடமிருந்து (IOC) 40,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெட்ரோலை வாங்க இலங்கை தேர்வு செய்துள்ளது.
கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு இந்தியாவின் பொருளாதார நிவாரணப் பொதியை முறைப்படுத்த இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்றும் இரண்டு வாரங்களில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா எரிபொருளை வழங்கியுள்ளது.
ஜனவரி மாதம், இலங்கையில் உள்ள அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் குறைந்துவிட்ட வெளிநாட்டு இருப்புக்களை கட்டியெழுப்பவும், உணவு இறக்குமதிக்காகவும் இந்தியா 900 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை இலங்கைக்கு தருவதாகா அறிவித்தது.
நேற்று (பிப்ரவரி 15) ஸ்வர்ண புஷ்ப் என்ற எண்ணெய் கப்பல் சரக்குகளை விநியோகிக்கப்பட்டபோது கொழும்பு துறைமுகத்தில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இருந்தனர்.
இலங்கையில் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வதில் இந்தியா-இலங்கை கூட்டு தொடர்ந்து செயல்படும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.