வெளிநாடுகளுக்கு நிதியுதவிகளை அதிகரித்த இந்தியா... பட்டியலில் முந்தும் இந்த நாடு
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் வெளி நாடுகளுக்கு என நிதியுதவியாக ரூ.5,483 கோடியை ஒதுக்கியுள்ளது, இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையான ரூ.5,806 கோடியை விட சற்று குறைவு.
இந்தியாவின் ஒதுக்கீடு
வெளிவிவகாரத் துறைக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.20,516 கோடியாக உள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் ரூ.2,150 கோடியைப் பெற்று, பூட்டான் இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு உதவி பெறும் நாடாகத் தொடர்கிறது.
கடந்த ஆண்டில் பூட்டான் ரூ 2,543 கோடி நிதியுதவியாக பெற்றுக்கொண்டுள்ளது. மாலத்தீவுகளுக்கான இந்தியாவின் ஒதுக்கீடு ரூ.470 கோடியிலிருந்து ரூ.600 கோடியாக அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா தனது ராணுவ வீரர்களை மாலத்தீவிலிருந்து திரும்பப் பெற்றது. தற்போது, மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் கசான் மௌமூன் இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளதால், ஒத்துழைப்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கான உதவி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.50 கோடியிலிருந்து 2025-26 ஆம் ஆண்டில் ரூ.100 கோடியாக அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ரூ.207 கோடியிலிருந்து இது மிகப்பெரிய சரிவாகும்.
இலங்கைக்கான ஒதுக்கீடு
மியான்மர் நாட்டில் நிலவும் கொந்தளிப்புக்கு மத்தியில், 2024-25 ஆம் ஆண்டில் ரூ.400 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடாக ரூ.350 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நேபாளத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இந்தியா ரூ.700 கோடியாகவே தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேவேளை பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டு வருவதால், இலங்கைக்கான ஒதுக்கீடு ரூ.300 கோடியாகவே உள்ளது.
கடந்த ஆண்டு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர ரீதியாக விரிசல் ஏற்பட்ட நிலையில், டாக்காவிற்கு வழங்கப்படும் உதவி ரூ.120 கோடியாக மாறாமல் உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளுக்கான உதவி கடந்த ஆண்டு ரூ.200 கோடியிலிருந்து ரூ.225 கோடியாக உயர்ந்துள்ளது. லத்தீன் அமெரிக்காவின் ஒதுக்கீடு ரூ.90 கோடியிலிருந்து ரூ.60 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |