உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடானது இந்தியா! சீனாவை விஞ்சியது: ஐ.நா
அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சியது என ஐ.நா தெரிவித்துள்ளது.
சீனாவை விஞ்சிய இந்தியா
சீனாவை விஞ்சி, இந்தியா இப்போது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது என்று புதன்கிழமை (ஏப்ரல் 19) புதிதாக வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) அறிக்கை தெரிவிக்கிறது.
சீனாவை விட இந்தியாவில் தற்போது 2.9 மில்லியன் மக்கள் அதிகமாக இருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.
EPA
ஐநாவின் உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022 (World Population Prospects 2022) 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விஞ்சும் என்று கணித்த பின்னர் இந்த தரவு வந்துள்ளது.
142.86 கோடி மக்கள்தொகை
UNFPA-ன் அறிக்கையின்படி, "The State of World Population Report, 2023" இன் சமீபத்திய தரவு, இந்த ஆண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை 142.86 கோடியாக இருக்கும். அதேநேரத்தில், சீன மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கும். மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக இருக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
UNFPA அறிக்கை, இந்தியாவில் 25 சதவீதம் பேர் 0-14 வயதுடைய குழந்தைகளாக உள்ளனர், அதேசமயம் 18 சதவீதம் பேர் 10-19 வயதுடையவர்கள் என்று அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 26 சதவீதம் பேர் 10-24 வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், 68 சதவீதம் பேர் 15-64 வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் 7 சதவீதம் பேர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
AFP
உலக மக்கள் தொகை
இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும். இதில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை இந்தியாவும், சீனாவுமே கொண்டிருக்கும். இருந்த போதிலும், இவ்விரு நாடுகளிலும் மக்கள் தொகை பெருக்க வேகம் தற்போது குறைந்து வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளாக உயர்ந்து கொண்டே இருந்த சீன மக்கள் தொகை கடந்த ஆண்டுதான் முதல்முறையாக அதற்கு முந்தைய ஆண்டைவிட குறையத் தொடங்கியது. இனியும் தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.