ஒட்டுண்ணி போல் ஏன் ஐரோப்பாவை ஆக்கிரமிக்கிறீர்கள்! வெளிநாட்டில் இந்தியரை இனவெறி தாக்குதல் நடத்திய அமெரிக்கர்
போலந்தில் இந்தியர் ஒருவரை குறிவைத்து 'ஒட்டுண்ணிகள்', 'ஆக்கிரமிப்பாளர்கள்' என கூறி அமெரிக்கர் ஒருவர் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
அமெரிக்கா முழுவதும் இருக்கிறீர்கள், இபோது ஐரோப்பாவையும் ஆக்கிரமித்து வருகிறீர்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
போலந்தில் இந்தியர் ஒருவரை அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் கேலி செய்யும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
ஐரோப்பிய நாடான போலாந்திற்கு சுற்றுலா வந்துள்ள அவர், இந்தியரை "ஒட்டுண்ணி ஆக்கிரமிப்பாளர்" என்று அழைப்பது முதல் "f**king up Europe" என்று குற்றம் சாட்டுவது வரை, தொடர்ந்து 4 நிமிடங்களுக்கு இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
தனது மொபைல் கமெராவை வைத்து அந்த இந்தியரை நோக்கி படம் பிடிக்கத் தொடங்கிய அவர், "நீங்கள் போலந்தில் ஏன் இருக்கிறீர்கள்? அமெரிக்காவில் உங்களில் பலர் உள்ளனர்" என்று கேள்வி எழுப்புகிறார்.
தன்னை படம்பிடிக்க வேண்டாம் என்று பல முறை சொல்லியும் அவரை விடாமல் பின் தொடருகிறார்.
சமூக ஊடக பயனர்கள் சிலர் அந்த நபரை ஜான் மினாடியோ ஜூனியர் என்று அடையாளம் கண்டுள்ளனர், அவர் Goyim TV என்ற வெறுப்புக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார் என்று கூறுகின்றனர்.
சில பயனர்கள் அவரை அதிக முறை குத்தவேண்டிய முகம் என்றும், அவர் ஒரு தோல்வியடைந்த முன்னாள் நடிகர் மற்றும் மோசமான ராப்பர் என்று கூறியுள்ளனர்.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. கடந்த வாரத்தில், கலிபோர்னியாவில் ஒரு இந்திய-அமெரிக்கன் "அசுத்தமான இந்து, கேவலமான நாய்" என்று துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன், டெக்சாஸில் இந்திய வம்சாவளி பெண்களை குறிவைத்து மெக்சிகன் அமெரிக்க பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்தார்.